கோவையை தொடர்ந்து மரக்காணத்தில் (Marakkanam) 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் 10 வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம்- மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி கூறியதாவது: விழுப்புரம் – மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களாக, நாள்தோறும் இதுபோன்று வரும் செய்திகளால் தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உரைந்து போயுள்ளனர்.
சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை ஒப்புக்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது.
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
