தமிழ் ராக்கர்ஸ் : பைரசியை முடிவுக்கு கொண்டு வருவாரா அருண் விஜய்

Published On:

| By Kavi

இந்திய திரையுலகில் பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனம் திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வந்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த சிவாஜி படத்தினை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அந்நிறுவனத்தின் திட்டமிடல், தொழில் ஒழுங்குமுறை ஆகியவற்றை அந்நிறுவனத்தால் அமல்படுத்த முடியாமல் போனது. இயக்குநர் ஷங்கர் கூறியபடி தான் எல்லாம் நடந்தது.

ADVERTISEMENT

மாறி வந்த சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களின் முடிவு எடுக்கும் உரிமை, சுயமரியாதை பறிக்கப்படுகிறது, அதனால் எதிர்வரும் காலத்தில் படத்தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை தற்போது ஓடிடி நிறுவனங்களுக்குத் திரைப்படம், தொடர்களைத் தயாரித்துத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் படத்தை சோனிலிவ் ஓடிடி தளத்திற்காக ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT
alt="Tamil Rockers"

மனோஜ் குமார் கலைவாணன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இத்தொடரில், அருண் விஜய், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‘ ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’, பார்டர் படங்களை இயக்கிய அறிவழகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

alt="Tamil Rockers"

கதை என்ன?

ADVERTISEMENT

ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை, மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை பைரசி சிக்கலிலிருந்து நாயகன் எவ்வாறு காப்பாற்றுகிறான்..?” என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களம் என்கிறார் இயக்குநர் அறிவழகன். நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்த தொடர், ‘ருத்ரா’ எனும் ஒரு காவல் அதிகாரியின் பயணம் மூலமாகத் திரைக்கதையை விவரிக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

alt="Tamil Rockers"

செய்தி திருட்டு

உலகளவில் கலையுலகில் சட்ட விரோதமான செய்தி திருட்டு என்பது மிகப் பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றைக் கலை உலகத்தினர் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

முதல்முறையாக ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியையும், தேடுதல் வேட்டையையும் நடத்தி, உண்மையை அறிந்து கொண்டு, இந்த சதி வலையில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக இத்தொடர் இருக்கும் என்கிறார் இயக்குநர் அறிவழகன் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஏவிஎம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் பேசுகையில், “இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தைக் கொண்டது. மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டியுள்ளனர்.

சோனி லிவ் நிறுவனத்தினை எங்களது பங்குதாரராக கொண்டது எங்களது பலத்தினை மேலும் கூட்டியுள்ளது. மேலும், தொலை நோக்கு சிந்தனையுள்ள இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் இருவரும் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டுமில்லாமல், மக்களுடன் ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு பந்தத்தினையும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.” என்றார்.

படத்தின் இயக்குநரான அறிவழகன் பேசும்போது, “பைரசி’, ‘ஹால் காபி’, ‘டோரன்ட் டவுன்லோட்’ போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் மற்ற உலகிற்கு தெரியாது.

‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இந்த சுவாரஸ்யமான திரில்லரில் நாயகன் அருண் விஜய் தனது ‘ருத்ரா’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் மக்களை பைரசி உலகத்தின் மர்மமான வாசல்களுக்கு அழைத்துச் செல்கிறார்” என்றார்.

alt="Tamil Rockers"

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தத் தொடரின் ஒரு பகுதியாக நானும் இருந்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராகவே நான் இதனை பார்க்கிறேன். திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

செய்தி திருட்டு என்பது காலம்காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொடர், திரையுலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். எனது கதாபாத்திரமான ‘ருத்ரா’ என்பவன் எப்படி இதனை முடிவிற்குக் கொண்டு வருகின்றான் என்பதுதான் கதை. எனவே, நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரைச் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காண்பதற்குக் காத்திருக்கின்றேன்” என்றார்.
இராமானுஜம்

புற்று நோயை வென்று வெப்சீரிஸ்: சோனாலி பிந்த்ரேவின் தன்னம்பிக்கைப் போராட்டம்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share