பாக்ஸ் ஆபீஸில் மோதும் வாரிசு நடிகர்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

pavish clash with atharvaa love oh love gets release date

தமிழ் திரையுலகில் ஜூலை மாத பாக்ஸ் ஆபீஸ் ரேஸ் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் தனுஷின் சகோதரி மகனும், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் அறிமுகமானவருமான இளம் நடிகர் பவிஷ் (Pavish), தனது இரண்டாவது படமான ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) மூலம் திரைக்கு வரத் தயாராகிவிட்டார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் முன்னணி நடிகர் அதர்வாவின் திரைப்படமும் வெளியாகவுள்ளதால் ஜூலை மாதத்தில் ஒரு சுவாரசியமான பாக்ஸ் ஆபீஸ் மோதல் உறுதியாகியுள்ளது.

ஜூலை 10 அன்று வெளியாகும் ‘லவ் ஓ லவ்’

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில், இத்திரைப்படம் வருகிற ஜூலை 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல தெலுங்கு யூடியூபர் நாக துர்கா இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவீன காலக் காதலின் சுவாரசியங்கள், குழப்பங்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களால் காதலன் படும் பாட்டைப் பேசும் ஒரு ஜாலியான ரொமாண்டிக் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT
அதர்வாவின் ‘இதயம் முரளி’ உடன் நேரடி மோதல்

பவிஷின் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் வெளியாகும் அதே ஜூலை 10-ஆம் தேதிதான், நடிகர் அதர்வா (Atharvaa) நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘இதயம் முரளி’ (Idhayam Murali) திரைப்படமும் வெளியாகிறது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ படத்தில் கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன் மற்றும் மலையாள ஸ்டார் ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த இரண்டு படங்களின் டீசர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஒரே நாளில் இரண்டு இளவட்ட காதல் திரைப்படங்கள் மோதுவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Love Oh Love - Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran | Foxn
பலமான தொழில்நுட்பக் கூட்டணி

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ படத்தை வெளியிட்ட சினேமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க, ஜி.தனஞ்செயன் இணை தயாரிப்பாளராகப் பங்களித்துள்ளார். இப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார். வாரிசு நடிகரின் மாறுபட்ட ரொமாண்டிக் காமெடி படமா அல்லது அதர்வாவின் ஸ்டைலிஷ் காதல் படமா, பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்கப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share