மக்களே உஷார்.. பருவ மழைக்கு முன்பே வேகம் எடுக்கும் பன்றி காய்ச்சல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

H1N1

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக நோய்க்கான அறிகுறிகளை பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 பன்றிக் காய்ச்சல் தொற்று பொதுமக்களிடையே தீவிரமடைவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் மாநிலத்தில் வெறும் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உள்ளது.

இந்த நோய்த்தொற்றின் முதன்மை அறிகுறிகளாகக் காய்ச்சல், இருமல், தொண்டை பகுதியில் ஏற்படும் வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, மிகுந்த உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. சில நோயாளிகளுக்கு தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கூடுதல் அசௌகரியங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

எனவே, லேசான சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். குறிப்பாக, மருத்துவரின் முறையான பரிந்துரையின்றி நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவ முறையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள் கண்டறியப்பட்ட உடனேயே அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சரியான சிகிச்சையைப் பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share