தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணி முன்னுரிமை: திருத்த மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான திருத்தம் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளில், நேரடிப் பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்துக் காலியிடங்களிலும் 20 சதவீத இடங்களை, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, இதற்காக 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் ஏற்கனவே அரசுப் பணியில் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆராயாமல், இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் ‘தமிழ் வழியில் பயின்றவர்கள்‘ என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கடந்த 2010 செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பின் இதுநாள் வரை தமிழில் படித்தவர்கள் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதி செய்வதோடு, புதிதாகப் பணியில் சேருவோருக்கு மட்டும் அச்சலுகையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், பிரிவு 3-ன் படி, முன்னுரிமை அடிப்படையில் மாநில அரசின் சேவைகளில் ஏதேனும் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்ட நபர், உயர் ஊதிய நிலை கொண்ட பதவிக்குச் செல்வதைத் தவிர, அதே போன்ற பிற முன்னுரிமை காலியிடங்களுக்கு மீண்டும் போட்டியிட உரிமை இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுப் பணிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் இந்தப் புதிய மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share