பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த முதல்வர் விஜய்க்கு காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், “பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக” அறிவித்தார். இதனையடுத்து பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஆனால், முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு காஞ்சிபுரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் வர்த்தக சங்கத் தலைவர் தங்கமணி, செயலாளர் சிங்காரவேலன், பொருளாளர் அமீர் பாஷா ஆகியோர் கூட்டாக (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொழில், வர்த்தகம் பன்மடங்கு அதிகரிக்கும்.
காஞ்சிபுரம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் 27-ந் தேதி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.
ஆனால் தற்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்வதேச விமான நிலையம் அமைவதன் மூலம் காஞ்சிபுரம் பட்டு கைத்தறி தொழில் வளர்ச்சி அடையும். இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கின்றோம். இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சருக்கும் மனு கொடுக்க இருக்கின்றோம்.
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம், பட்டுசேலைக்கு உலக பிரசித்தி பெற்ற பிரசித்தி பெற்ற ஊர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த முடியாது போனால் வர்த்தகப் பெருமக்களும் பொதுமக்களும் இணைந்து மிகப் பெரிய போராட்டத்தை தொடங்கும் நிலையில் இருக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்கிற பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் அரசியல் பார்க்காமல், அத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் விஜய் முன்வர வேண்டும்.
100 குடும்பங்களுக்காக தமிழ்நாட்டின், இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் முடிவை முதல்வர் விஜய் மேற்கொள்ள கூடாது; ஆகையால் பரந்தூர் பகுதி மக்களுடன் முதல்வர் விஜய் பேசி, அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கி சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.
காஞ்சிபுரம் சரித்திர புகழ் பெற்ற நகரம். யுவான் சுவாங் காலத்தில் இருந்து பேசப்படுகிற ஊர். ஆனால் இன்றளவும் முன்னேற்றம் அடையவில்லை. காஞ்சிபுரம் முன்னேற்றம் அடைய வாய்ப்பாக இருப்பது பரந்தூர் விமான நிலைய திட்டம்தான். ஆகையால் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு காஞ்சிபுரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
