புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் பாதயாத்திரையாக புறப்பட்டார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தில், மாதா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வரும் 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை வேளாங்கண்ணி கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரியில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 25) வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். கடலூர் மாவட்டத்தை நேற்று மாலை கடந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், ”27 ஆண்டுகளாக சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றேன். தற்போது சட்டசபை கூட்டம் நடப்பதால் முதல்வர் விஜய்யிடம் அனுமதி பெற்று புதுச்சேரியில் இருந்து பாதயாத்திரை செல்கிறேன். பாதயாத்திரையாக வரும் வழியிலும் பொதுமக்கள் மனு கொடுக்கின்றனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
