அதிகாரிகள் தாமதத்திற்கு மாணவி பொறுப்பேற்க வேண்டுமா… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

சாதி சான்றிதழ் வழங்க அதிகாரி ஏற்படுத்திய தாமதத்திற்கு மாணவி பொறுப்பேற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

சென்னை அம்பத்தூரை சேர்ந்த கீர்த்தி என்ற மாணவி  மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்காக விண்ணப்பித்த போது, இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கிறிஸ்துவ சிறுபான்மை சான்று ஆகியவை இல்லாததால் சான்றிதழ்கள் கிடைத்த பின்னர் அவற்றை சமர்ப்பிப்பதாக உறுதி அளித்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் கீர்த்திக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி கிறிஸ்தவ சிறுபான்மை சான்றும், 11ஆம் தேதி இருப்பிடச் சான்றும், 15 ஆம் தேதி சாதி சான்றும் கிடைத்தன. 

இதைத்தொடர்ந்து அவர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த போது காலக்கெடு முடிந்து விட்டதாக அலர்ட் வந்துள்ளது. 

ADVERTISEMENT

இதனால் கீர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். 

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். 

ADVERTISEMENT

இன்று (ஆகஸ்ட் 25) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “சாதிச்சான்று ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்து இருக்கிறது. இந்த தாமதத்துக்கு மாணவி பொறுப்பேற்க முடியாது. 

சான்றிதழ் வழங்கும் அதிகாரியால் ஏற்பட்ட தாமதத்துக்கு மனுதாரரை குறை கூற முடியாது. சான்றிதழ் சமர்ப்பிக்காததை மட்டுமே காரணமாக கொண்டு விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது. 

அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, தகுதி தரவரிசை மற்றும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு உட்பட்டு கீர்த்தியை கலந்தாய்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து விட்டால் அடுத்தடுத்த சுற்றுகளில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share