ரூ.3 போதாது… நாங்கள் எப்படி பிழைப்பது? பால் உற்பத்தியாளர்கள் வேதனை!

Published On:

| By Kavi

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 24)  பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அதே சமயம் தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை 50 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றன.

இதனால் ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் ஆவினை விட கூடுதலாக 15 ரூபாய் வரை கொள்முதல் செய்யும் நிலையில், முதல்வர் விஜயின் இந்த அறிவிப்பு பால் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கோரிக்கை வைத்து போராட்டம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியை பொறுத்த வரை 350 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திநிலையில் திருச்சி மாவட்டம், அயிலாப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவசூரியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பால் கொள்முதல் விலையை தமிழக வெற்றிக்கழக அரசு உடனே உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அயிலாப்பேட்டையை சேர்ந்த பெண் விவசாயி கூறுகையில், ”பெண்களாகிய எங்களுக்கு மாடுகள் தான் வாழ்வாதாரமே. பால் விலை உயர்த்துகிறோம் என்று கூறிவிட்டு இப்படி குறைந்த அளவில் உயர்த்தினால் எங்களுக்கு எப்படி கட்டுபடியாகும்? புண்ணாக்கு, தவிடு, பொட்டு ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்துவிட்டது.

கால்நடை மருத்துவர்களும் கட்டணம் அதிகமாக வசூலிக்கின்றனர். ஒருமுறை வந்து ஊசி போட்டால் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் கேட்கிறார்கள். இங்கு அரசு மருத்துவர்களும் சரியாக வருவதில்லை.

பசும்பாலுக்கு 44 ரூபாய் தருவதாக சொன்னார்கள். ஆனால் இப்படி குறைத்து அறிவித்தால் என்ன அர்த்தம்.

நாங்கள் எப்படி பிழைப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு பெண் விவசாயி சந்திரா கூறுகையில், “பசும்பாலுக்கு லிட்டருக்கு 44 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ராசாத்தி என்ற பால் உற்பத்தியாளர் கூறுகையில், “எங்கள் பகுதியில் அரசு மருத்துவர் இல்லை. எனவே அரசு மருத்துவர்கள் ஏற்பாடு செய்து தந்து பால் விலையையும் ஏற்ற வேண்டும். தவிடு, பால், புண்ணாக்கு விற்கிற விலைக்கு அதற்கே காசெல்லாம் செலவாகி விடுகிறது. வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை” என்றார்.

பால் உற்பத்தியாளர் சிவசூரியன், “கடந்த திமுக, அதிமுக ஆட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் கொண்டு வருவோம் என கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இது பொதுமக்களுக்கு பெரிய ஏமாற்றமாகதான் இருக்கிறது.

விவசாய கடன் தள்ளுபடியில் ஒரு குளறுபடியை ஏற்படுத்தியதால், இன்றுவரை விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உறுதியான முடிவு எதுவும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பால் விலையை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தி கொடுப்போம் என்று கூறினார்கள்.

ஆனால் 3 ரூபாய் தான் அறிவித்திருக்கிறார்கள். முன்பு கால்நடை தொழில் என்பது விவசாயத்தின் உப தொழிலாக இருந்தது. ஆனால் விவசாயத்தில் லாபம் இல்லாததால், படித்த இளைஞர்கள், மகளிருக்கு வேலை இல்லாததால் இதுவே முதன்மை உயிர்த்தொழிலாக மாறிவிட்டது.

படித்த இளைஞர்கள் கூட 10, 20 மாடுகள் வைத்து பண்ணை நடத்த தொடங்கி விட்டனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசே கடன் கொடுத்து மாடு வாங்க சொல்லி இருக்கிறது. அவர்களும் அதை நம்பித்தான் இருக்கிறார்கள்.

எனவே பசும்பாலுக்கு 44 ரூபாய் அல்லது 45 ரூபாய் உயர்த்தி தரவேண்டும். எருமை பாலுக்கு 60 ரூபாய் உயர்த்தி தருமாறு கோரிக்கை வைக்கிறோம். பால் உயர்வு குறித்த முடிவை அரசு மறுபரிசீலினை செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கூட்டுறவு சங்கத்திற்கு பாலை கொடுக்காமல் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஆவின் நிறுவனத்தின் கீழ் 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்களும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு பால் லிட்டருக்கு ரூ.31 அல்லது ரூ.32 தான் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு கட்டுபடியாகவில்லை. முதலமைச்சர் ஏற்றிய விலையின்படி எங்களுக்கு 35 ரூபாய் தான் கிடைக்கும். எனவே பசும்பாலுக்கு 50 ரூபாயாகவும் எருமை பாலுக்கு 60 ரூபாயாகவும் எங்களுக்கு ஏற்றி கொடுக்க வேண்டும். விலை கட்டுப்படி ஆகாததால் எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாப்பிள்ளை கவுண்டன்புதூர் பகுதி விவசாயிகள், கொள்முதல் நிலையம் முன்பு பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு ஒன்று திரண்ட விவசாயிகள் ஆவினுக்கு பால் ஊற்றுவதை புறக்கணித்து சொசைட்டி முன்பாகவே தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடந்தன.

இதற்கிடையே இன்று காலை ஆவின் பால் கொள்முதல் விலை தொடர்பாக பேசிய, திமுக முன்னாள் அமைச்சரும் கொறடாவுமான எ. வ. வேலு, ”ஆவினுக்கு பால் வழங்குவது ஒரு கேள்விக்குறியாக மாறி உள்ளது. தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை. கேரளாவில் ஒரு லிட்டர் பால் 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். அதுபோல தமிழகத்திலும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”கால்நடைகளின் தீவனங்கள் விலையும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. அரசு அறிவித்த விலை போதாது என பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே ஒரு லிட்டர் பசும்பால் ரூ.50 க்கும் எருமைப்பால் 60 ரூபாய்ககும் கொள்முதல் செய்ய வேண்டும்” என்று
வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, ”பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும்” என்று பதிலளித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share