மானாமதுரை அருகே சட்டக் கல்லூரி மாணவர் சிவபாலன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் சிவகங்கை அருகே தனியார் சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். சிவபாலன், தனது உறவினரான முருகேசன் என்பவரின் மகளைத் திருமணம் செய்து தருமாறு வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே மானாமதுரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று சிவபாலனுக்கும் முருகேசனின் மகன் அருண்ராஜ்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவபாலன் வாளால் தாக்க முயன்றதாகவும், இது குறித்து அருண்ராஜ் தனது தந்தை முருகேசனிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, முருகேசன் சிவபாலனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் முருகேசன் அரிவாளால் தாக்கியதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் முருகேசன் மற்றும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட சிவபாலனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக முருகேசன் மற்றும் அவரது மகன் அருண்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
