சென்னை கம்பன் கழகத்தின் 52ஆவது ஆண்டு விழா (2026)
கம்பன் – காலம் கடந்து நிற்கும் கவிச்சித்திரம்!
தமிழை வளர்ப்பதற்கும் தமிழரின் பண்பாட்டை விளக்குவதற்கும் நமக்குக் கிடைத்த பெரும் இலக்கியக் கருவூலம் கம்பராமாயணம். கம்பன் கதையை மட்டும் சொல்லவில்லை; கதைக்குள் கருத்தை வைத்தான்; கருத்துக்குள் அறத்தை வைத்தான்; அறத்துக்குள் மனிதத்தை வைத்தான்; மனிதத்துள் மாண்பை வைத்தான். தயரதன், இலக்குவன், வீடணன், கலைக்கோட்டு முனிவன் என்று பாத்திரங்களின் பெயர்களில்கூட தமிழின் மணம் கமழச் செய்தவன் அவன். அதனால் கம்பனைப் படிப்பது ஒரு கதையைப் படிப்பதல்ல; ஒரு காலத்தைப் படிப்பது; ஒரு பண்பாட்டைப் படிப்பது.
அத்தகைய கம்பனை ஆண்டுதோறும் மேடைக்கு அழைத்துவந்து, நூலுக்குள் இருப்பவனை நம் நெஞ்சுக்குள் குடியேற்றும் பெரும்பணியைச் செய்து வரும் சென்னை கம்பன் கழகத்தின் ஆன்றோர் போற்றும் 52ஆவது ஆண்டு கம்பன் விழா, ஆகஸ்டு 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், ‘கம்ப சித்திரத்தில் கண்மயங்கும் வண்ணங்கள்’ என்ற மையக்கருத்தோடு நடைபெற்றது. மையக்கருத்தின் வண்ணங்கள் மூன்று நாட்களும் முகில்கள் அனுப்பிய வானவில்லாய் கம்ப ரசிகர்களின் எண்ணங்களில் நின்று நிலவியதே இவ்விழாவின் வெற்றியாகும்.

கம்பர் விருது
முதல்நாள் விழா: நூல் வெளியீடு, விருது வழங்குதல், கம்பாவனத்தில் ஓர் உலாவென முப்பெரும் விழாவாக முதல்நாள் முகிழ்த்து கம்பன் விழா..
உச்சநீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் அவர்கள் தலைமையேற்று, சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் பதிப்பித்த ‘பரம்பொருளின் தகைசால் தம்பியர்’ என்னும் நூலை வெளியிட்டு, ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதினை உலகப் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் முகமது ரெலா அவர்களுக்கு வழங்கினார்.
காவியம் படைத்த கம்பனைப் படித்து அதன் மகத்துவம் பேசும் மருத்துவருக்கு மகுடம் சூட்டிய தருணமது. மேலும், வண்டமிழ்ச் சிறகால் வானளந்து வரும் 19 இலக்கியவாதிகளின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, நீதியரசரின் கரங்களினால் ஆன்றோர் அமைத்த நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இலக்கியப் போட்டிகள்
சென்னை கம்பன் கழகத்தின் பாராட்டுக்குரிய இன்னொரு முகம் அடுத்த தலைமுறையை இலக்கியத்தின் பக்கம் அழைத்து வருவது. தமிழக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்காக திருக்குறள், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி ஆகிய ஆறு பெரும் இலக்கியங்களை முன்வைத்து பேச்சு, ஒப்பித்தல், கட்டுரை, கவிதை எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், தேர்வுபெற்ற கல்லூரிகளுக்குச் சுழற்கேடயங்களும் விழாவில் வழங்கப்பட்டன.
அரங்கை அதிர வைத்த ஜெகத்ரட்சகன்
கம்பனை வாசித்த வாசகனின் ரசனையும், கம்பனை ஆராய்ந்த ஆய்வாளனின் தேடலும், கம்பனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பும் ஓர் இலக்கிய ஆர்வலரின் ஏக்கமும் நிறைந்த சென்னை கம்பன் கழகத் தலைவர் ‘நயவுரை நம்பி’ டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் M.P. அவர்களின் வரவேற்புரை விழாவின் தொடக்கத்திற்கு ஒரு வானவில்லின் வண்ண நுழைவாயிலை அமைத்தது.
அவர் தன் வரவேற்புரையில், “நீராலும், பூவாலும், நினைவாலும், தமிழாலும் நித்தம் போற்றும் இராமபிரானை என் கண்ணுக்குள்ளே வைத்துக் காவல் காப்பவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன். தொட்டதெல்லாம் அதிர்கின்ற வீணையின் நரம்பைப்போல, கம்பனைத் தொட்டாலே அதிர்கின்றன என் நாடி நரம்புகளெல்லாம் வானத்தைப் போலவும் பூமியைப் போலவும் வயதானது நம் தமிழ் அதே சமயம் வயது கடந்து. இளமை நிறைந்து, புதுமை மிகுந்து, பூரிப்பைத் தருவது தமிழ்தான். அதற்குக் காரணமே ஒன்று – கம்பனின் தமிழ்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வானவில்லுக்கு வண்ணந்தான் அழகு வட்ட நிலவிற்குப் பெண்ணின் கன்னம்தான் அழகு. இலக்கியத்திற்கு எண்ணந்தான் அழகு. இன்பத்தமிழுக்குக் கம்பன்தான் அழகு என்று சொல்லுகின்ற தங்கத் தமிழில் தடுமாறி விழுந்தால் எழவே முடியாது. எந்த வாசத்தில் விழுந்தாலும் எழுந்துவிடலாம்; கம்பவாசத்தில் விழுந்தால் எழவே முடியாது.
கம்பனைப் பற்றிப் பேசத் தொடங்கினால் நாக்கு தித்திக்கும்; பேசிக்கொண்டிருக்கும்போது வாக்கு தித்திக்கும். கேட்கத் தொடங்கினால் காது தித்திக்கும் ; கேட்டுக்கொண்டே இருந்தால் காற்றே தித்திக்கும். அப்படிப்பட்ட மாபெரும் கவிஞன் கம்பன்.
சிசுவைப் பத்து மாதந்தான் ஒரு தாய் சுமக்கிறாள். கம்பன் என்ற மகாகவிக் கருவைப் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்த்தாய் சுமக்கிறாள். இராமனைக் கொண்டாடக் கடுகளவு பக்தி இருந்தால் போதும்; ஆனால் கம்பனைக் கொண்டாட உலகியல் தெரிந்திருக்க வேண்டும், உளவியல் தெரிந்திருக்க வேண்டும் தமிழியல் தெரிந்திருக்க வேண்டும், அழகியல் தெரிந்திருக்க வேண்டும், அறிவியல் தெரிந்திருக்க வேண்டும்.
கம்பன் வண்ணத்தமிழுக்கு வளைகாப்பு நடத்தியவன். யாப்பு உடையழகும், தேர்ந்த சொல் தொடுக்கும் நடையழகும், அணியழகும், சந்தனத் தனியழகும் இராமகாதைபோல ஒரு நூல் கிடையவே கிடையாது. இராமாயண காலத்தில் கம்பன் இருந்திருந்தால், இராவணன் சீதையை விட்டுவிட்டு கம்பன் காப்பியத்தைச் சிறையெடுத்திருப்பான்!
திருத்தத்தில் வெற்றி பெற்றான் ஒட்டக்கூத்தன்; தீர்ப்பளித்து வெற்றி பெற்றான் கரிகாற்சோழன்; நிருத்தத்தில் வெற்றி பெற்றான் ஆட்டனத்தி; நிதியளித்து வெற்றி பெற்றான் பாரிவள்ளல்; வருத்தத்தில் வெற்றி பெற்றார் வடலூர் வள்ளல்; வாளேந்தி வெற்றி பெற்றான் சேரலாதன்; விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன்தானே! என்று அரங்கம் அதிர முழங்கினார்.

கம்பனுக்குள் இருந்த நீதிமன்றம்
முதல்நாள் நிகழ்வின் மிக முக்கியமான அறிவுசார் பதிவுகளில் ஒன்று மாண்புமிகு நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் முன்வைத்த கருத்து. கம்பனின் காவியத்தில் நீதி இருக்கிறது; சமத்துவம் இருக்கிறது; மனிதநேயம் இருக்கிறது; ஆட்சிநெறி இருக்கிறது; சட்டத்தின் உயிர்ப்பும் இருக்கிறது. இளம் நீதிபதிகள் கம்பனை வாசிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து கம்பராமாயணத்தை வெறும் பழங்காலக் காவியமாகப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்தது.
கம்பனுக்குள்ளேயே ஒரு நீதிமன்றம் இருந்ததை எடுத்துக்காட்டிய அவர், அறமும் ஆட்சியும் நீதியும் மனிதநேயமும் ஒன்றோடொன்று கைகோர்க்க வேண்டுமென்பதை கம்பன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கவிதைக்குள் விதைத்திருக்கிறான் என்று மொழிந்தார். கம்பன் எழுதிய இராமாயணத்தை ஒரு சமய நூலாகப் பார்க்கக்கூடாது. பள்ளிகளில் ஒரு பாடமாக வைக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளம்; அதற்கு அடுத்து செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம். எனவே கம்பர் கூறிய கருத்துகளை அந்தந்த வழிகளில் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்றும், கம்பன் அக்காலத்திற்கு மட்டுமல்ல, இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகளைக் கூறியிருக்கிறார். அந்தக் கருத்துகளை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்றும் நீதியரசர் மேலும் தெரிவித்தார்.
கம்பன் அழகு
முதல்நாள் இலக்கிய நிகழ்ச்சியில் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் ‘அழகினுக்கு அழகு செய்த கம்பன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். கம்பனே அழகு. அவன் சொல்லும் அழகு. அவன் சொல்லுக்குள் பிறக்கும் பொருள் அழகு. அந்தப் பொருளுக்குள் ஒளிந்திருக்கும் மனித உணர்வு இன்னும் அழகு. அந்த அழகுக்கே அழகு சேர்த்த கம்பனைப் பற்றிய உரை, முதல்நாளின் இலக்கிய மணத்தை மேலும் கூட்டியது.
கம்பவனத்தில்… ஓர் உலா’
அதன்பின் சொல்வேந்தர் சுகி. சிவம், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இருவரும் ‘உலா’ வரும் உரவோராகச் சந்தித்த ‘கம்பவனத்தில்… ஓர் உலா’ நிகழ்ச்சி தனிச்சுவை தந்தது. மணம்பூக்கும் சொற்களோடும், பசுமை வார்க்கும் கருத்துக்களோடும் இருவரும் உலாவந்தபோது மேடையே கம்பவனமானது! பார்வையாளர்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்; ஆனால் மனம் மட்டும் அவர்களோடு கம்பவனத்தில் நடந்தது. முற்காலத்தில் கம்பனோடு பயணித்த கனவுககளையும் கம்பனில் தோய்ந்த அறிஞர்கள் தமக்கு அளித்த அருட்கொடை நினைவுகளையும் இருவரும் பகரும்போது இளமை அவர்களிடம் குடியேறியது. கேட்ட அனைவரும் கம்பனின் மடிதாவினர்.
கம்ப உலகு திறந்த 2-ம் நாள் நிகழ்வுகள்
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் முதல்நாளின் தொடர்ச்சியாக மட்டும் அமையவில்லை; இன்னொரு புதிய கம்ப உலகத்தைத் திறந்தன.
செல்வி அ.ர. ராஜயாழினியின் சுடர் உரையைக் கேட்டோர் போற்றினர். மேலும் புகழீன வாழ்த்தினர். முனைவர் மு. இராமச்சந்திரன் அரங்க நாயகராக வழிநடத்தி, புதுகை ச. பாரதி, ஆசிரியர் கோ. மணி, மருத்துவர் முகமது ரெலா, வழக்கறிஞர் க. சுமதி, திருமதி அனுகிரகா ஆதிபகவன், திருமதி சங்கீதா பழனி, வழக்கறிஞர் பால சீனிவாசன், வழக்கறிஞர் அ.க. இராஜாராமன் ஆகியோர் பங்கேற்றுப் பேசிய ‘எண்மர் முழங்கும் எண்சுவை அரங்கம்’ விண்ணைப் பிளக்கும் கரவொலியால் எண்ணத்தில் நிறைந்தது. கம்பராமாயணத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்திராத எட்டு பாத்திரங்கள் ஒரே மேடையில் சந்தித்துப் பேசினால்? அதுவே சுவையான கற்பனை. நூலில் தனித்தனியாக வாழ்ந்த பாத்திரங்கள் மேடையில் ஒன்றாக சந்தித்தபோது கம்பனின் கதைக்குள் இன்னொரு கதவையே திறந்ததுபோல் இருந்தது. அவரவர் கம்பனில் அள்ளிய சொற்களால் வெள்ளி வீதியில் விழாக்கொண்டாடினார்.
பேரெழில் கம்பனின் பேராற்றல்
பரிசுபெற்ற மாணாக்கர்களின் ‘இளமையில் ஆடும் இளமயில் அரங்கம்’, முனைவர் இரா. மாது அவர்கள் நட்டுவனாராகப் பரிமளிக்க, ‘பேரெழில் கம்பனின் பேராற்றல் பெரிதும் வெளிப்படுவது எவ்வெவற்றில்?’ என்ற ஆடுபொருளை அரங்கினர் உள்ளத்தில் அமரவைத்தது. இளமை பேசினால் வேகம் இருக்கும். இலக்கியம் பேசினால் ஆழம் இருக்கும் வேழமென வியந்து பார்க்கும் வண்ணம் விளங்கியது சொற்சுவை எண்ணம் மூத்தவர்கள் மேடையை நிரப்புவது பெருமை; இளையவர்கள் மேடையை நிரப்புவது திறமை. அந்தத் திறமையின் பெருமையில் கம்பனின் கவிப்பொருள் கவினுற மின்னியது. தலைமையும் பின்னியது.
‘கம்பனைப் போற்றும் காளமேகங்கள்’
கம்ப சித்திரத்தின் கவின்மிகு வண்ணங்களை உலகம் சுவைக்கத் தங்கள் வாழ்நாளையே தமிழ்ப்பணிக்கு வழங்கியவர்கள் கம்பனடிப்பொடி சா. கணேசன், வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன், திருமுருக கிருபானந்த வாரியார், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன், முனைவர் ஔவை நடராசன் ஆகிய ஆறு அறிஞர் பெருமக்கள். அவர்களைப் போற்றிய ‘கம்பனைப் போற்றும் காளமேகங்கள்’ நிகழ்ச்சி இரண்டாம் நாளின் நெகிழ்வான பகுதிகளில் ஒன்று. மரம் உயர்ந்து நிற்பதை அனைவரும் பார்க்கின்றோம். ஆனால் அதன் வேர்கள் எவ்வளவு ஆழம் சென்றிருக்கின்றன என்பதை எத்தனை பேர் நினைக்கிறோம்? இன்றைய கம்பன் மேடைகளின் உயரத்திற்குக் கீழே, நேற்றைய அறிஞர்களின் உழைப்பு வேர்களாகப் பரந்திருக்கிறது. அந்த வேர்களுக்கு விழா செய்த வணக்கமே இந்நிகழ்ச்சி. சொல்வேந்தர் சுகி. சிவம் தலைமையில். முனைவர் கிருங்கை சேதுபதி, முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம், முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், முனைவர் தி. இராசகோபாலன் ஆகிய மூதறிஞர்கள் முகில்களைப் போற்றினர்.
‘கம்பனென்றொரு கதை சொல்லி’
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளில் அறிவும் ஆய்வும் நகைச்சுவையும் வாதமும் ஒன்றோடொன்று கைகோர்த்தன.
முனைவர் வ.வே.சு. ஏந்தும் எழிலாக ‘கம்பனென்றொரு கதை சொல்லி’ என்னும் தலைப்பில் எழிலுரை வழங்கினார். கம்பன் கதையின் கருப்பொருள் தந்த அகப்பொருள் என்னும் ஏற்றமிகு உரை போற்றும்படி அமைந்தது; அதன் பின் வித்தகம் தெறிக்கும் வினா-விடை மேடை:
‘கவிச்சக்கரவர்த்தியே! இது நியாயமா? என்ன அழகான சிந்தனை! கம்பனைப் புகழ்வது எளிது. கம்பனைப் படிப்பது அதைவிடச் சிறப்பு. கம்பனையே கேள்வி கேட்பதற்கு கம்பனை இன்னும் ஆழமாகப் படித்திருக்க வேண்டும்! ஐந்து பாத்திரங்கள் கம்பனை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுத்தபோது எதிரே நின்றது கம்பன் அல்ல கம்பனின் காவிய நுட்பம். கேள்விகள் எழுந்தன; கிளைகள் விரிந்தன; பதில்கள் பிறந்தன; கம்பனின் படைப்பாற்றல் மேலும் உயர்ந்தது. உயர்த்தியவர் கம்பராக அமர்ந்திருந்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ். இராம கணைகள் அறத்தை நிலைநிறுத்தியதைப்போல கம்பனை நோக்கிக் கனிவோடு கணைகளைத் தொடுத்தவர்கள் திரு. வீரபாலாஜி, திரு. தாமல் கோ. சரவணன், முனைவர் ந. விஜயசுந்தரி, முனைவர் டி.எஸ். பிரேமா, திரு. கி. சிவக்குமார் அணைகடந்த மகிழ்ச்சி வெள்ளம் கரை காணவியலாக் கம்பனில் அலைமோதியது.
அதன்பின் ‘கம்பன் கவியே கவி’ என்று கம்ப காவியத்தின் நுட்பங்களை விரித்த அருந்தமிழ் ஆய்வுரை. உரையாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார். சொல்லைத் தொட்டால் சுவை; சுவையைத் தொட்டால் சிந்தனை; சிந்தனையைத் தொட்டால் தத்துவம் தத்துவத்தைத் தொட்டால் அங்கே கம்பன்! அப்போதே அலர்ந்த ஆனந்தம் அவரவர் மவுலி சூட்டிக்கொண்ட பேரானந்தம்!.
‘வென்று நின்ற சொல் யார் சொல்?
மூன்றாம் நாளின் முத்தாய்ப்புகளில் ஒன்று ‘வென்று நின்ற சொல் யார் சொல்?’ – ‘ மந்தரையின் சொல்லா, சூர்ப்பணகையின் சொல்லா, தரையின் சொல்லா!’ என்ற பன்னருங்கலைதெரி பட்டிமண்டபம். தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் நடுவராகப் பரிமளித்த இவ்வரங்கில், புலவர் மா. இராமலிங்கம், மருத்துவர் பிரியா ராமச்சந்திரன், முனைவர் பர்வீன் சுல்தானா, திருமதி தெய்வானை மணிகண்டன், திருமதி பௌசியா பானு, திருமதி தெய்வநாயகி கார்த்திகேயன், கவிஞர் விஜயகிருஷ்ணன், திருமதி எழிலரசி, திரு. த. திருமாறன் ஆகியோரின் உரைவீச்சு உள்ளத்தில் வென்ற சொற்களை உலவவிட்டன. அங்கே சொற்கள் வெறும் சொற்களாக வரவில்லை. சான்றோடு வந்தன; சுவையோடு வந்தன; சிந்திக்க வைத்தன. வாதங்கள் வாள்களாயின. இலக்கியச் சான்றுகள் கேடயங்களாயின. நகைச்சுவை இடையேடையே தென்றலாயிற்று. மறுப்பு இருந்தது; மரியாதை குறையவில்லை வாதம் இருந்தது; வன்மம் இல்லை. நகைச்சுவை இருந்தது; நயம் குறையவில்லை. பாட்டியலிலிருந்து நடுவர் பட்டியலிட்ட வரிகள் தீர்ப்புக்குத் தூதுபோயின. கோதிலாத் தீர்ப்பு தாரையின் சொல்லைத்தான் தரையில் வென்று நின்ற சொல்லாகத் திரைவிரித்துத் தெளிவாய்க் காட்டியது.
இவ்வாண்டு வளர்ந்துவரும் இளம் பேச்சாளர்களின் கருத்தாழமிக்க உரைவீச்சு கம்பன் விழாவின் வைரக் கற்களாக மின்னின. கம்பனில் ஆழங்கண்ட மூதறிஞர்கள் அறுவரின் தமிழ்ப்பணியைப் பதிவு செய்து பாராட்டிய நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்தது. அவர்கள் கம்பனை வாசித்தவர்கள் மட்டுமல்ல; கம்பனைச் சுவாசித்தவர்கள். கம்பனைப் பேசியவர்கள் மட்டுமல்ல; கம்பனில் வாழ்ந்தவர்கள். கம்பனை ரசித்தவர்கள் மட்டுமல்ல; தலைமுறைகளையே கம்பனை ரசிக்க வைத்தவர்கள்! அவர்கள் பல ஆண்டுகளாகத் தமிழுக்குச் செலுத்திய உழைப்புக்கு காலம் எழுதிய நன்றிக் கடிதத்தைச் சென்னை கம்பன் கழகம் வாசித்தது.
ஒரு விழாவின் வெற்றி எங்கே தெரிகிறது? மேடையின் அலங்காரத்தில் மட்டுமா? வருகை தந்த பெரியவர்களின் எண்ணிக்கையிலா? அரங்கு நிறைந்த கூட்டத்திலா? இல்லை. அவரவர் நகர்ந்த பின்னும் நெஞ்சில் அருகமர் கம்பன் நகரவில்லை. கம்பனைத் தவிர வேறொன்றை மக்கள் நுகரவில்லை. ஒரு பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றவர் கம்பராமாயணத்தை மீண்டும் எடுத்துப் புரட்டினால் – அதுதான் வெற்றி. ஒரு மாணவன் அடுத்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் – அதுதான் வெற்றி. ஒரு இளம் பேச்சாளர், “அடுத்த ஆண்டு நானும் இந்த மேடையில் நிற்க வேண்டும்” என்று கனவு கண்டால் – அதுதான் வெற்றி. கம்பனை இதுவரை படிக்காத ஒருவர், “இந்தக் கம்பனிடம் அப்படி என்னதான் இருக்கிறது?” என்று தேடத் தொடங்கினால் – அதுவே மிகப்பெரிய வெற்றி! அந்த வகையில் சென்னை கம்பன் விழா கூட்டத்தைக் கூட்டிய விழா மட்டுமல்ல; கம்பனை நோக்கிக் கவனத்தைக் கூட்டிய விழா.
சென்னை கம்பன் கழகத் தலைவர் ‘நயவுரை நம்பி’ டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், செயலாளர் பேராசிரியர் முனைவர் சாரதா நம்பிஆரூரன் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மேடைக்குப் பின்னால் உழைத்த அத்தனை பேரின் கூட்டு முயற்சியே இத்தகைய பெருவிழாவைச் சாத்தியமாக்கியது. ஒரு மாலையை மலராகப் பார்க்கிறோம்; அதை இணைத்த நூலைப் பெரும்பாலும் பார்ப்பதில்லை. இந்த மூன்று நாள் இலக்கிய மலர்மாலையின் பின்னால் இருந்த அந்த ‘நூல்’ – ஒருங்கிணைப்பு!
ரசிகனின் மனத்தில் எது மிஞ்சியது? விருதுகளா? உரைகளா? நூல் வெளியீடா? மாணவர்களின் மலர்ச்சியா? மூதறிஞர்களுக்குச் செய்யப்பட்ட மரியாதையா? எல்லாமே! ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஒன்று மிஞ்சியது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கவிஞனைப் பற்றி இன்றைய தலைமுறை பேசுகிறது. அவனது ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகிறது. ஒரு பாத்திரத்தின் செயலுக்கு வாதிடுகிறது. ஒரு பாடலின் நயத்தைக் கேட்டுக் கரவொலி எழுப்புகிறது. இதைவிட ஓர் இலக்கியத்தின் உயிர்ப்புக்கு வேறு என்ன சான்று வேண்டும்? மூன்று நாட்கள் அல்ல – மூன்று தலைமுறைகளின் சந்திப்பு! இந்த விழாவை இன்னொரு கோணத்தில் பார்த்தால் – மூத்த அறிஞர்களின் அனுபவம், இன்றைய பேச்சாளர்களின் ஆற்றல், இளைய மாணவர்களின் வாய்ப்பு என்ற மூன்று தலைமுறைகளையும் ஒரே மேடையில் சந்திக்க வைத்த விழா இது.
முடிந்தது விழா முடியவில்லை அதன் முழக்கம்! மூன்று நாட்களுக்குப் பிறகு அரங்கின் கதவுகள் மூடப்பட்டிருக்கலாம். ஆனால் கம்பனின் கதவுகள் பல மனங்களில் என்றுமே திறந்துள்ளன. அதனால்தான் சென்னை கம்பன் விழாவிலிருந்து வெளியே வந்த ரசிகன் “ஒரு விழாவைப் பார்த்துவிட்டு வந்தேன்” என்று மட்டும் சொல்ல முடியாது. அவன் சொல்வது: “கம்பனுக்குள் சென்று வந்தேன்; தமிழுக்குள் திளைத்து வந்தேன்; ஒரு காவியத்தின் காலடியில் மூன்று நாட்கள் அமர்ந்து வந்தேன்!” என்பதுதான்.
சென்னை கம்பன் கழகம் ஆண்டுதோறும் கம்பனுக்கு விழா எடுக்கிறது என்று சொல்வதைவிட -கம்பனை ஆண்டுதோறும் புதிதாகக் காண்கிறது; காணவைக்கின்றது என்று சொல்வதே பொருத்தம்.
வரைவு : கவிஞர் விஜயகிருஷ்ணன் 9600644446
கட்டுரையாளர் குறிப்பு

கவிஞர் விஜயகிருஷ்ணன், துணைச் செயலாளர், சென்னை கம்பன் கழகம்,
சமூகப் பணியாளர், தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நெறியாளர்.
ஒன்பதாவது வருடமாகத் தினமும் கிராமத்தின் நடுவில் தேசியக்கொடி ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாடும் சிறுதாமுர் கிராம ஒருங்கிணைப்பாளர்.
