நா.மணி
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் காலங்களில் அதிகமாகப் பேசப்படும் சொல் “நூறு விழுக்காடு தேர்ச்சி”.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதைக் கல்வித்துறை ஒரு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்காக பொதுத்தேர்வு மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் கற்றல் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பின்தங்கிய மாணவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இவை அனைத்தும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
மாணவர்கள் தேர்ச்சி பெறுவதும், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவதும் மிக முக்கியமான கல்வி இலக்காகும்.
தேர்சிக்கு ஒற்றை காரணம் இல்லை

நூறு விழுக்காடு தேர்ச்சி என்ற இலக்கு நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்கும்போது சில அடிப்படையான சிக்கல்கள் தென்படுகின்றன.
ஒரு பள்ளியில் நூறு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினால் நூறு பேரும் தேர்ச்சி பெற்றால்தான் நூறு விழுக்காடு. ஒரே ஒரு மாணவர் தோல்வியடைந்தாலும் அல்லது தேர்வுக்கு வரவில்லை என்றாலும் அந்த எண்ணிக்கை 99 ஆகிவிடுகிறது.
இவ்வாறு ஒரு பள்ளியின் முழு கல்விச் செயல்பாட்டை ஒரு மாணவனின் இறுதி தேர்வு முடிவுடன் இணைத்துப் பார்ப்பது, கல்வியின் பல்வேறு காரணிகளை மிக எளிமைப்படுத்திவிடுகிறது.
ஒரு மாணவனின் தேர்ச்சி என்பது ஆசிரியர் வகுப்பில் கற்பித்ததன் நேரடி விளைவு மட்டுமல்ல. அவனுடைய குடும்பம், பொருளாதார நிலை, பெற்றோரின் கல்வி நிலை, பள்ளி வருகை, கற்றலுக்கான வீட்டுச் சூழல், உடல்நலம், மனநிலை, சமூகச் சூழல் போன்ற பல காரணிகள் அதில் பங்கு வகிக்கின்றன.
அரசுப் பள்ளி குழந்தைகள் யார்?

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் சமூகப் பின்னணியை இந்த இடத்தில் தனியாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
எல்லா குழந்தைகளும் ஒரே நிலையில் இருந்து பள்ளிக்குள் வருவதில்லை. சில குழந்தைகள் கல்வி பெற்ற பெற்றோர்களின் குடும்பங்களில் இருந்து வருகிறார்கள்.
சிலர் குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் பள்ளிக் கல்வியைப் பெறுகிறார்கள். சில குடும்பங்களுக்கு கல்வி என்பது குழந்தையின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய கருவி என்ற புரிதல் ஆழமாக இருக்கலாம்.
இன்னும் சில குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கான போராட்டமே முதன்மையாக இருக்கலாம். தாய் இல்லாத குழந்தைகள், தந்தை இல்லாத குழந்தைகள், இரு பெற்றோர்களும் இல்லாமல் தாத்தா பாட்டியின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் எனப் பலவிதமான குடும்பச் சூழல்களிலிருந்து அரசுப் பள்ளி வகுப்பறைக்கு மாணவர்கள் வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களை ஆற்றல் படுத்தலின் சிக்கல்கள்

இப்படிப்பட்ட மாணவர்களிடம் பாட அறிவை மட்டும் கொண்டு கற்றலை உருவாக்கிவிட முடியாது.
கல்வியின் மதிப்பையும், கல்வி தங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி என்பதையும் அவர்களுக்குள் உருவாக்க வேண்டியிருக்கிறது. இதனால் அரசுப் பள்ளி ஆசிரியரின் பணி பாடப்புத்தகத்தை வகுப்பறையில் கற்பிப்பதோடு முடிந்து விடுவதில்லை.
பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவனைப் பற்றி கவலைப்பட வேண்டியுள்ளது. வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவனின் குடும்பச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பின்தங்கிய மாணவருக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. பெற்றோருடன் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. சில நேரங்களில் ஒரு ஆசிரியர் மாணவனுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரிய பெரியவராகவும் செயல்பட வேண்டியிருக்கிறது.
குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளிடம் கல்வி பற்றிய நம்பிக்கையை உருவாக்குவது ஒரு நீண்டகாலப் பணியாகும்.
இந்தச் சூழலில் ஆசிரியர்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆசிரியர்கள் அனைவரும் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கு எதிரானவர்கள் அல்லர். அவர்களும் தங்கள் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
ஆனால் தங்களால் கட்டுப்படுத்த முடியாத பல காரணிகளுக்கும் தாங்களே பொறுப்பாளர்களாகக் கருதப்படுகிறோம் என்ற உணர்வு அவர்களிடம் உருவாகும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது.
தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேர்ச்சி விகிதம் குறைந்ததற்காக விளக்கம் கேட்கப்பட்டு, மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடப்பட்டு, பொதுவாகக் குறை கூறப்படும் சூழல் உருவானால் ஆசிரியரின் தொழில்முறை நம்பிக்கையும் பாதிக்கப்படும்.
கல்வி நிர்வாகத்தின் நோக்கம் ஆசிரியரை அச்சுறுத்துவது அல்ல, அவருக்கு தேவையான ஆதரவை வழங்கி அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்யச் செய்வதாக இருக்க வேண்டும். சில ஆசிரியர்களிடையே “முன்பு மாணவர்களை கடுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது; இப்போது பிரம்பைப் பயன்படுத்த முடியவில்லை, அதனால் மாணவர்களைப் படிக்க வைப்பதும் ஒழுங்குபடுத்துவதும் கடினமாகிவிட்டது” என்ற மனக்குமுறலும் காணப்படுகிறது.
உண்மையான சிக்கல் என்ன?
இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளை அடித்து அல்லது அச்சுறுத்தி கல்வி கற்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறை. ஆனால் அதே நேரத்தில் தண்டனை முறைகள் இல்லாத சூழலில் மாணவர்களிடம் பொறுப்புணர்வையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவதற்கான மாற்று வழிமுறைகளை பள்ளியும் சமூகமும் வலுப்படுத்த வேண்டும்.
பிரம்பு இல்லாதது கல்வியின் பிரச்சினை அல்ல, பிரம்புக்குப் பதிலாக நம்பிக்கை, உரையாடல், வழிகாட்டுதல், பெற்றோர் பங்கேற்பு, மாணவர் பொறுப்பு ஆகியவற்றை வலுப்படுத்தாததே உண்மையான சிக்கல்.
நூறு விழுக்காடு தேர்ச்சி குறித்து பேசும்போது மாணவர்களின் பள்ளி வருகையும் அதே அளவு முக்கியத்துவத்துடன் பார்க்கப்பட வேண்டும்.
ஒரு கல்வியாண்டில் பள்ளி தொடர்ந்து செயல்பட்டாலும், ஒவ்வொரு மாணவரும் அந்த நாட்களில் தொடர்ந்து பள்ளிக்கு வருகிறாரா என்பது தனியான கேள்வி. நீண்ட காலம் பள்ளிக்கு வராத மாணவனை பொதுத்தேர்வுக்கு அழைத்து வந்து, அவன் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்றால் அதன் முழுப் பொறுப்பையும் ஆசிரியரிடம் ஒப்படைப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல.

பள்ளிக்கு வருகை என்பது கற்றலின் அடிப்படை நிபந்தனை. எனவே நூறு விழுக்காடு தேர்ச்சி என்ற இலக்குடன் நூறு விழுக்காடு கற்றல் பங்கேற்பையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
பின்தங்கிய மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.
ஆனால் அந்த வகுப்புகளுக்கே மாணவர்கள் வராத நிலை பல இடங்களில் இருக்கிறது. மாணவர் ஏன் வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல், வராததற்கும் ஆசிரியரை மட்டுமே பொறுப்பாக்குவது பிரச்சினையைத் தீர்க்காது.
சில மாணவர்களுக்கு வீட்டுப் பொறுப்புகள் இருக்கலாம். சிலருக்கு பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு பள்ளி மீது ஈடுபாடு குறைந்திருக்கலாம். சிலருக்கு தங்களால் படிக்க முடியாது என்ற மனநிலை உருவாகியிருக்கலாம்.
ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரே தீர்வு இருக்க முடியாது. இதற்குத் தேவையான மாணவர் ஆலோசனை, குடும்பத் தொடர்பு, சமூகப் பங்கேற்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.
பெற்றோரின் பங்கு
இதில் பெற்றோரின் பங்கும் மிக முக்கியமானது. குழந்தையை பள்ளியில் சேர்த்துவிட்டால் கல்வி தொடர்பான பெற்றோரின் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை.
குழந்தை பள்ளிக்கு முறையாகச் செல்கிறதா, வீட்டில் படிக்கிறதா, எந்தப் பாடத்தில் சிரமப்படுகிறது, சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கிறதா என்பதைக் கவனிப்பது பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக கல்வியின் முதல் தலைமுறை குடும்பங்களில், பெற்றோரிடம் இந்தப் பொறுப்பை உருவாக்குவதற்கே பள்ளி ஒரு சமூகப் பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
பள்ளிகளும் தேர்ச்சி விகிதங்களும்
பெற்றோரை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக அவர்களையும் பள்ளியின் கல்விச் செயல்பாட்டின் பங்காளிகளாக மாற்றுவது நீண்டகாலத் தீர்வாக அமையும். ஒரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை மதிப்பிடும்போது 90 விழுக்காடு மற்றும் 100 விழுக்காடு இடையேயான வேறுபாட்டையும் நிதானமாகப் பார்க்க வேண்டும்.
70 விழுக்காடு தேர்ச்சி பெறும் பள்ளிக்கு கூடுதல் கல்வி ஆதரவு, ஆசிரியர் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத் தலையீடு தேவைப்படலாம். ஆனால் 90 அல்லது 95 விழுக்காடு தேர்ச்சி பெறும் பள்ளியையும் அதே அளவிலான அழுத்தத்துடன் அணுகுவது பயனுள்ள நிர்வாகமாக இருக்காது.
ஒரு பள்ளி 70 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காட்டுக்கு உயர்ந்திருந்தால், அந்த முன்னேற்றம் மிகப் பெரிய கல்விச் சாதனையாகும். எனவே இறுதி தேர்ச்சி விகிதத்துடன் பள்ளியின் முன்னேற்றத்தையும் மதிப்பிடும் முறையை உருவாக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கிடையேயான போட்டியிலும் இதே அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒரு பள்ளியின் மாணவர் நிலை ,சமூகப் பின்னணி, குடும்பப் பொருளாதார நிலை, பெற்றோர் கல்வி நிலை ஆகியவை மற்றொரு பள்ளியிலிருந்து வேறுபடலாம்.
சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு தனிப்பட்ட வாய்ப்புகளை வழங்குவதற்காக மாதிரிப் பள்ளிகள் செயல்படுவது ஒரு பக்கம் வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்தாலும், அதனால் மற்ற அரசுப் பள்ளிகளில் மாணவர் அமைப்பு மாறினால் அந்த மாற்றத்தையும் பள்ளிகளின் செயல்திறனை மதிப்பிடும்போது கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியான சூழலை உருவாக்காமல் ஒரே மாதிரியான முடிவை மட்டும் எதிர்பார்ப்பது சமத்துவமான கல்வி அணுகுமுறையாக இருக்காது.
உலகின் முன்னேறிய நாடுகளின் கல்வி முறைகளைப் பார்க்கும்போதும் இதே உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பின்லாந்து போன்ற நாடுகளின் கல்வி முறையை நாம் அடிக்கடி உதாரணமாகக் குறிப்பிடுகிறோம். ஆனால் அங்கு காணப்படும் ஒரு நடைமுறையை மட்டும் எடுத்துக்கொண்டு நமது சூழலுக்கு பொருத்த முடியாது.
அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு, குடும்பச் சூழல், ஆசிரியர் பயிற்சி, பள்ளி வளங்கள், கல்வி நிர்வாகம், பெற்றோர் பங்கேற்பு ஆகியவை வேறுபட்டவை. பின்லாந்தின் அடிப்படைக் கல்வியில் தேசிய அளவிலான பொதுத்தேர்வுகள் மூலம் பள்ளிகளை தரவரிசைப்படுத்தும் நடைமுறை இல்லை. ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றலைத் தொடர்ந்து மதிப்பிடுவதிலும் கற்பித்தல் முறைகளைத் தேர்வு செய்வதிலும் கணிசமான தொழில்முறை சுதந்திரம் உள்ளது. இந்த அணுகுமுறையின் பின்னால் இருக்கும் அடிப்படைச் சிந்தனையைப் புரிந்துகொள்வதே நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நமது கல்வி அமைப்பில் பொதுத்தேர்வுகள் முக்கியமானவை. மாணவரின் கல்வி நிலையை அறிய அவை உதவுகின்றன. உயர்கல்விக்கான வாய்ப்புகளுக்கும் அவை அவசியமானவை.
எனவே பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை குறைப்பது நோக்கமல்ல. ஆனால் தேர்வு முடிவை மட்டும் வைத்து பள்ளியின் முழு கல்வித் தரத்தையும், அதையும் தாண்டி ஆசிரியரின் தொழில்முறை திறனையும் மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல. மாணவர் பள்ளிக்கு வருகிறாரா, கற்றலில் முன்னேறுகிறாரா, பின்தங்கிய மாணவர்களின் இடைவெளி குறைகிறதா, பள்ளி விட்டு விலகுதல் குறைகிறதா, பெற்றோர் பங்கேற்பு அதிகரிக்கிறதா என்பனவும் கல்வியின் முக்கியமான விளைவுகளாகக் கருதப்பட வேண்டும்.
ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசும் சமூக மரபு நமக்கு இருக்கிறது. பேரறிஞர் அண்ணா முதல் நெல்சன் மண்டேலா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வரை பல தலைவர்கள் ஆசிரியரின் சமூகப் பங்கை உயர்வாகப் பேசியுள்ளனர்.
அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர் ஆசிரியர் என்ற புரிதல் உலகம் முழுவதும் காணப்படுகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரிடம் பொறுப்பைக் கேட்கக் கூடாது என்பதல்ல; அவருடைய பொறுப்பை மரியாதையுடன் அணுக வேண்டும் என்பதே முக்கியம். பொறுப்பும் கண்ணியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. மாறாக, கண்ணியத்துடன் வழங்கப்படும் பொறுப்பே சிறந்த தொழில்முறை செயல்பாட்டை உருவாக்கும்.
அரசுப் பள்ளிகளின் கல்வி வெற்றியை உண்மையாக உயர்த்த வேண்டுமானால், ஆசிரியரை மட்டும் மையப்படுத்திய அணுகுமுறையிலிருந்து பள்ளி முழுமையையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு நாம் நகர வேண்டும்.
ஆசிரியருக்கு தேவையான கல்வி வளங்கள் கிடைக்க வேண்டும். பின்தங்கிய மாணவர்களுக்கு தொடர்ச்சியான கல்வி ஆதரவு கிடைக்க வேண்டும். பெற்றோர்களுடன் பள்ளியின் உறவு வலுப்படுத்தப்பட வேண்டும். பள்ளிக்கு வருகை குறையும் மாணவர்களை அடையாளம் கண்டு குடும்பத்துடனும் சமூகத்துடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள் குறை கூறும் மேடைகளாக இல்லாமல் பிரச்சினைகளைத் தீர்க்கும் தொழில்முறை மேடைகளாக மாற வேண்டும்.
மிக முக்கியமாக, அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவனின் வாழ்க்கையை கல்வியின் மையத்தில் வைக்க வேண்டும். அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது முக்கியம். பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதும் முக்கியம். ஆனால் அதைவிட அவன் உயர்கல்விக்குச் செல்லும் கனவைப் பெறுவது முக்கியம். தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்வது முக்கியம். சமூகத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையை மாற்றக்கூடிய திறனைப் பெறுவது முக்கியம். கல்வி தன்னுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி என்ற நம்பிக்கையைப் பெறுவது அதைவிட முக்கியம்.
நாம் துரத்த வேண்டியது

எனவே “நூறு விழுக்காடு தேர்ச்சி” என்ற இலக்கை கைவிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்த இலக்கை ஒரு நிர்வாக எண்ணாக மட்டுமே பார்க்காமல், ஒவ்வொரு குழந்தையும் கற்க வேண்டும் என்ற பரந்த கல்வி இலக்கின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். நூறு மாணவர்களில் நூறு பேரும் தேர்ச்சி பெறுவது சிறந்த சாதனைதான்.
ஆனால் அந்த நூறு மாணவர்களும் பள்ளிக்கு முறையாக வந்து, கற்றலில் முன்னேறி, தங்கள் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையைப் பெற்று, உயர்கல்விக்கும் நல்ல எதிர்காலத்திற்கும் தயாராகி இருந்தால் மட்டுமே அந்த நூறு உண்மையான கல்வி வெற்றியாக மாறும்.
கல்வியின் வெற்றி என்பது தேர்வு முடிவில் வரும் ஒரு எண்ணால் மட்டும் அளக்கப்படக் கூடாது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் கல்வி பெறும் ஏழை எளிய குழந்தைகளின் வாழ்க்கையில் பள்ளி ஏற்படுத்தும் மாற்றத்தால் அது அளக்கப்பட வேண்டும். ஒரு குழந்தை வறுமையிலிருந்து கல்வியின் வழியாக முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றால், ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு புதிய பாதை திறக்கப்பட்டால், ஒரு மாணவன் “என்னாலும் முடியும்” என்ற நம்பிக்கையைப் பெற்றால், அங்கேதான் அரசுப் பள்ளியின் உண்மையான வெற்றி தொடங்குகிறது.
நாம் துரத்த வேண்டியது நூறு என்ற எண்ணை மட்டும் அல்ல. நூறு குழந்தைகளுக்கும் நூறு வாழ்க்கை வாய்ப்புகளை உருவாக்குவதே.

