தங்களது காப்பீட்டுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகை ‘கபளீகரம்’ செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1,489.75 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையில் அரசு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற முக்கியமான விவரத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல்லைச் சேர்ந்த Frederic Engels பெற்ற தகவலில், 01.07.2021 முதல் 30.06.2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் NHIS திட்டத்திற்காக அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.14,897,450,208 (சுமார் ரூ.1,489.75 கோடி) பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எத்தனை இனங்களில், எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்காமல், அவற்றை United India Insurance Company-யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.28.16 கோடி Corpus Fund-ல் ரூ.3.56 கோடி மட்டுமே
இதனைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து NHIS திட்டத்தில் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.3.56 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் ரூ.24.60 கோடி Corpus Fund தொகையின் நிலை மற்றும் பயன்பாடு குறித்து முழுமையான கணக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.
அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது மருத்துவப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு வழங்கப்பட்டது என்பதற்கான முழுமையான விவரமே RTI பதிலில் வழங்கப்படாதது, NHIS திட்டத்தின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
‘Cashless Treatment’ – ஊழியர்களே பணம் செலுத்தும் அவலம்
NHIS திட்டம் “Cashless Treatment” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் Package Rate System மூலம் மருத்துவச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதால், மருத்துவமனையின் உண்மையான செலவுக்கும் காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் Package தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஊழியர்களே தங்களது கையிலிருந்து செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது.

உதாரணமாக, கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு உண்மையான செலவு ரூ.30,000-க்கும் அதிகமாக இருக்கும் நிலையில் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதய Stent சிகிச்சைக்கு ரூ.1,17,000 வரை செலவாகும் நிலையில் ரூ.85,000 மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் ஏற்கனவே அரசிடம் அளித்துள்ள முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அரசு ஊழியர்கள், காப்பீட்டுத் திட்டத்திற்காக ஊதியத்திலிருந்து பணம் செலுத்திய பிறகும், சிகிச்சைக்காக மீண்டும் தங்களது கையிலிருந்து பணம் செலுத்த வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.
புதிய NHIS-2026 – முந்தைய திட்டத்தைவிட மோசமானதா?
தற்போது வெளியிடப்பட்டுள்ள G.O.Ms.No.122, Finance (Health Insurance) Department, dated 24.06.2026 மூலம் புதிய NHIS-2026 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த Package Rate System-ஐ நீக்குவதற்குப் பதிலாக, அது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய திட்டத்தில், மாதாந்திர பிடித்தம் ரூ.300-லிருந்து ரூ.390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Corpus Fund பிடித்தம் ரூ.5-லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Network அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவ உதவி 75%-லிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Package System மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் A1, A2, B, C என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயச் சேர்க்கை தொடர்கிறது.
இதனால், முந்தைய ஆட்சியில் “Cashless Treatment” என்ற பெயரில் மறைமுகமாக Package System நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு நேரடியாகவே Package System-ஐ மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.
முழுமையான கணக்கை அரசு வெளியிட வேண்டும்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது, எத்தனை ஊழியர்கள் பயனடைந்தனர், எந்தெந்த சிகிச்சைகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது, காப்பீட்டு நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது, நிர்வாகச் செலவாக எவ்வளவு செலவிடப்பட்டது என்பன உள்ளிட்ட முழுமையான கணக்கை தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதேபோல், ஊழியர்களிடமிருந்து Corpus Fund-ஆக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.28.16 கோடியில் ரூ.3.56 கோடி மட்டுமே மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுமார் ரூ.24.60 கோடியின் நிலை என்ன என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மையான 100 சதவீத Cashless Treatment வழங்கப்பட வேண்டும். Package Rate System கைவிடப்பட்டு, மருத்துவமனையின் உண்மையான மருத்துவச் செலவை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் புறக்கணித்து கட்டாயமாக திணிக்கப்படும் முறையை கைவிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இந்திய வங்கி ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, உண்மையான மருத்துவச் செலவை ஈடுசெய்யும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

G.O.Ms.No.122-ஐ உடனடியாக மறுஆய்வு செய்து, Package Rate System-ஐ கைவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்யும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
நாளது தேதியில் எத்தனையோ தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பணமில்லா சிகிச்சையைத் தருவதாக பல்வேறு தளங்களில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழியர்களின் தன்விருப்பம் கோரப்பட வேண்டும். விருப்பமில்லாத ஊழியர்களை இத்திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 20.08.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடிதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை நிலை தொடர்ந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
