”தப்புதான்… போலீசை அறைந்திருக்க கூடாது” : தஞ்சாவூர் இளைஞர் பேட்டி!

Published On:

| By Kavi

விசிக மறியல் போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்தது தொடர்பாகத் தஞ்சாவூர் இளைஞர் ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது ஆகாஷ் என்ற இளைஞரைப் போலீஸ் அதிகாரி ரஹீம் கன்னத்தில் அறைந்தார். இதற்குப் பதிலாக அந்த இளைஞர் ஆகாஷும் போலீஸ் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுப் புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆகாஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்தச் சூழலில் இன்று (ஆகஸ்ட் 25) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கட்சிக்காரர்கள் மீதுதான் தவறு. முதலில் எனக்கு வேலை இருக்கிறது என்று ரிக்வெஸ்ட் செய்து கேட்டேன். அதனால் இரண்டு பசங்கள் எழுந்துவிட்டார்கள்.

அப்போது வெள்ளை நிறச் சட்டை அணிந்து ஒருவர் வந்தார். அவரிடம், ‘உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது, என் பிரச்சனை என்னவென்று உங்களுக்குத் தெரியாது. நான் வேலைக்குப் போனால்தான் எனக்குச் சம்பளம்’ என்று சொன்னேன்.

ADVERTISEMENT

அப்போது சிவப்பு நிறச் சட்டை அணிந்து வந்தவர், வழக்கு போட்டு உள்ளே தூக்கி வைத்துவிடுவேன் என்றார். அவர் விடவே முடியாது என்று சொல்லிவிட்டார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போது போலீஸாரும் வந்தனர்.

முதலில் கை ஓங்கினார், ஆனால் அடிக்கவில்லை. அதற்குப் பிறகு ‘அடிடா பார்ப்போம்’ என்றேன். போலீஸ் அதிகாரியும் என்னை அடித்துவிட்டார்.

நானும் பதிலுக்கு அடித்துவிட்டேன். சீருடையில் இருந்த அதிகாரியை அடித்தது தவறுதான். அவர் வயதிலும் மூத்தவர். என் மீது தவறு இருக்கிறது. ‘ஏன் அடிக்க வருகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கலாம்.

காவல்துறை மீது எந்தத் தவறும் கிடையாது. 30 ஆண்டுகளுக்கு மேல் அவர் சர்வீஸில் இருக்கிறார். ‘அன்று அடித்ததால்தான் இந்த பிரச்சனை இதோடு நின்றது. இல்லையென்றால் கட்சிக்காரர்களை அடித்திருந்தால் பிசிஆர் வழக்கு போட்டிருப்பார்கள்’ என்று போலீஸார் சொன்னார்கள்.

நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன், காவல்துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினருக்கும் மன அழுத்தம் இருக்கும். லாக்டவுன் காலத்தில் நான் சமூகச் சேவையும் செய்திருக்கிறேன்.

தற்போது எனக்கு வேலை போய்விட்டது. குடும்பச் சுமை அதிகமாக இருக்கிறது. அதனால் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் எனக்கு நன்றாக இருக்கும்.

அன்றைய தினம் நான் ஜெயிலுக்குப் போகும்போது எனக்குப் பிறந்தநாள். எனது குடும்பத்தினருக்கு அது எப்படி இருந்திருக்கும்?

என் மீதான வழக்கையும் காவல்துறையினர் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share