காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் (ஆகஸ்ட் 28) தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. மேட்டூர் அணை நீர் திறப்புக்காக முதல்வர் விஜய் வருகை தர இருப்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் 90 அடி அளவுக்கு நீர் இருக்கும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டால்தான், காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.
ஆனால் இந்த ஆண்டு காவிரியில் போதுமான நீர் வரத்து இல்லை; தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப் பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறக்கவும் இல்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், இதனை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா போதுமான அளவு காவிரி நீரை திறந்துவிடவில்லை.

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக உள்ளது. தற்போதைய காவிரி நீர் வரத்து நிலவரத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை 90 அடியை எட்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே சட்டசபையில் நேற்று (ஆகஸ்ட் 24) மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்” என கூறியிருந்தார்.
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீரை நாளை மறுநாள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார்.

இதனால் மேட்டூர் அணை பகுதியில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட எஸ்.பி குத்தாலிங்கம் உள்ளிட்டோர் நேற்று மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
