மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்யக் கோரி தனித் தீர்மானத்தை தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 7) கொண்டு வருகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளை நினைவுகூர்ந்தும், மாநிலங்கள் தங்களது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்பதை உணர்ந்தும்,
தமிழ்நாடு, தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதை கவனத்தில் கொண்டும்,
மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டும்,
(1) இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு இணங்க, ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய நிதிப் பகிர்வினை உறுதி செய்ய வேண்டும்.
(2) மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
(3) மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும்.
(4) எதிர்காலத்தில் மத்திய வரிகளின் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, தமிழ்நாடு மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவை நிதியமைச்சர் மரிய வில்சன் கொண்டு வரவுள்ளார்.
