அடுத்த சுற்று ஆரம்பம்.. நவ.1 முதல் ‘ரவுண்டு’ கட்ட வரும் மழை- வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Weather-Rain-Tn

தமிழகத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் ஓரிரு இடங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 3-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 28-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கான மழை நிலவரம் குறித்து தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 31 வரை மழை நிலவரம்

அக்டோபர் 28 முதல் 30-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அக்டோபர் 31-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நவம்பர் 1 முதல் மழை எப்படி இருக்கும்?

நவம்பர் 1-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 2-ந் தேதி வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இதனால் தமிழகத்தில் நவம்பர் 1, 2-ந் தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, ஓரிரு இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 3-ல் திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை

நவம்பர் 3-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அன்றைய தினம் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 1, 2-ந் தேதிகளில் எந்த மாவட்டத்துக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நவம்பர் 3-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு மட்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share