ஆந்திராவில் கரையைக் கடந்த அர்னாப் புயல் பலத்த காற்று, கனமழையால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகள் சேதமடைந்தன. இந்த புயல் மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான அர்னாப் அதி தீவிர புயல் நேற்று (அக்டோபர் 28) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடந்தது.
ஏனாமுக்குத் தென்மேற்கில் நர்சாபூர் அருகே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இடையிடையே காற்றின் வேகம் 150 கிலோ மீட்டர் வரை அதிகரித்தது. இதனால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. புயல் கரையைக் கடந்த பிறகு படிப்படியாக வலுவிழந்தது.
26 செ.மீ. மழை.. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்
விசாகப்பட்டினம், விஜயநகரம், அனகப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அக்டோபர் 27-ந் தேதி காலை முதல் 28-ந் தேதி அதிகாலை வரையிலான பதிவுகளின்படி, அனகப்பள்ளி மாவட்டத்தின் கண்ணூரிபாலெம் பகுதியில் 26.15 செ.மீ. மழை பதிவானது.
விஜயநகரம் மாவட்டத்தில் 25.97 செ.மீ. மழையும், விசாகப்பட்டினத்தின் ஒரு பகுதியில் 25.91 செ.மீ. மழையும் பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. பல இடங்களில் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
15,000 மின்கம்பங்கள் சாய்ந்தன
புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த தகவலின்படி, மாநிலத்தில் சுமார் 15,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. கோனசீமா, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காக்கிநாடா மாவட்டத்தில் உப்பாடா கடற்கரைச் சாலை கடுமையாகச் சேதமடைந்தது.
5 பேர் பலி.. வீடுகள், பயிர்கள் சேதம்
அர்னாப் புயலால் ஏற்பட்ட மின்சார விபத்துகள், சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புயலால் நெற்பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், சாலைகள், மின்சாரக் கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை முழுமையாகக் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பே கடலோர மாவட்டங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆந்திராவில் 50,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக 16 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும், 11 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும் 14 மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், புயல் பாதிப்புகளைச் சீரமைக்க சுமார் 30,000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புயல் சேதங்களை மதிப்பிட மத்திய குழுக்களை விரைவாக அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
