எல் நினோ பாதிப்பு காரணமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெப்ப பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால், நீர் சத்து குறைவு உள்ளிட்ட பிரச்சினையை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இரவு நேரத்திலும் வெட்கையாக இருப்பதால் குளிர்ந்த நீரில் குளிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
அப்படி இரவு நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் சூடு குறையுமா?
“கோடைகால இரவில் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும் என்பதற்காக சிலர் கடும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு உறங்கச் செல்கின்றனர்.
ஆனால் உண்மையில் இது உடலை மேலும் சூடாக்கி விடும்” என்கிறார் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மனித உடலியல் பேராசிரியர் மைக் டிப்டன்.
மேலும் அவர், “திடீரென கடும் குளிர்ந்த நீர் உடலில் படும்போது, அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஆகிய மனஅழுத்த ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். அது நம்மை விழிப்புடன் வைக்கும். தூங்க செல்லும் நேரத்தில் இது நிச்சயமாக நமக்குத் தேவையில்லாத ஒன்று. எனவே தூங்கச் செல்வதற்கு முன் கடும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதல்ல.
தூங்குவதற்கு முன் உடலைக் குளிர்விக்க, மிதமான வெதுவெதுப்பான நீரே மிகவும் பயனுள்ளது. ஏனெனில் இது தோலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் வெப்பத்தை மெதுவாக வெளியேற்ற உதவும்.
அதேசமயம் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கச் செய்யும். உடலின் வெப்பத்தை சீராக்குவதில் முக்கிய வழிகளில் ஒன்று ரத்த ஓட்டம்.
உடல் சூடாக இருக்கும் போது தோலுக்கு அருகில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும். அப்போது சூடான ரத்தம் தோலின் மேற்பரப்பை நோக்கி சென்று உடலில் உள்ள வெப்பத்தை காற்றில் வெளியேற்றச் செய்யும்.
ஆனால் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது இதற்கு நேர்மாறான மாற்றத்தை ஏற்படுத்தும். தோலுக்கான ரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இதனால் உடலின் வெப்பம் உட்பகுதியிலேயே தங்கிவிடும். அதன் பிறகு நேரம் கழித்து தான் வெளியேறத் தொடங்கும்.
எனவே மிதமான அல்லது வெதுவெதுப்பான நீரில் உறங்குவதற்கு முன் குளிக்கலாம்” என்று கூறுகிறார்.
