மூல நோய் அறிகுறிகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

symptoms of hemorrhoids and causes how to prevent piles

மூல நோய் அறிகுறிகள், வருவதற்கான காரணங்கள், தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூல நோய் என்பது மிக மிக வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருந்து வருகிறது. ஆசன வாய் அல்லது மலக்குடலில் நரம்புகளில் ஏற்படும் வீக்கத்தால் மூல நோய் உண்டாகிறது. பெரும்பாலான மக்கள் கூச்சப்பட்டுக்கொண்டு மூல நோய் இருப்பதை வெளியில் சொல்வது இல்லை. ஆனால், பிரச்னையை வெளியே சொல்லாமல் இருப்பதும், மருத்துவரை சந்திக்காமல் இருப்பதும் மூல நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. மூல நோய் உள்ளவர்கள் சொல்ல முடியாத வலியையும் துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். பிரச்னை சில சமயங்களில் மோசமாகி அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குக் கூட தள்ளப்படுவோம். மூல நோயின் அறிகுறிகள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

மூல நோயின் அறிகுறிகள்

மூல நோய் உள் மற்றும் வெளி மூலம் என இரண்டு வகையாக உள்ளது. உள் மூல நோய் என்பது மலக்குடலின் உள்ளே ஏற்படுகிறது. இது ஆரம்பத்தில் வலியற்றதாக இருக்கும். மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு, முழுமையாக மலம் கழிக்க முடியாதது போன்ற உணர்வு இருக்கும். பின்னர், ஒரு கட்டி தோன்றுவது ஆகியவை அறிகுறிகளில் அடங்கும்.

ADVERTISEMENT

வெளி மூல நோய் ஆசனவாய்க்கு வெளியே ஏற்படுகிறது. ஆசனவாய்க்கு அருகில் ஒரு கட்டி அல்லது வீக்கம் தென்படும். உட்கார்ந்திருக்கும்போது அல்லது நடக்கும்போது வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். சில நேரங்களில், ரத்தப்போக்கு கூட ஏற்படலாம். இது வெளி மூலத்தின் அறிகுறிகளாகும். மூல நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

மூல நோய் ஏற்படுவதற்கான காரணம்

ADVERTISEMENT

மூல நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை. இதுதவிர போதுமான தண்ணீர் குடிக்காதது, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது, அதிகப்படியான காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவது, நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது, உடல் சூடு, உடல் பருமன் மற்றும் கர்ப்பம் ஆகியவை மூல நோய் ஏற்படுவதற்கான காரணமாகும்.

மூல நோயை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மூல நோய் என்பது வெட்கப்பட்டு மறைக்க வேண்டிய விஷயம் அல்ல, விழிப்புணர்வுடன் செயல்படுவதுதான் சிகிச்சையின் முதல் கட்டம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் சீரான உணவின் மூலம் மூல நோயைக் கட்டுப்படுத்தலாம்.

மலம் எளிமையாக வெளியேற வாழைப்பழங்கள், பெர்ரி உள்ளிட்ட பழ வகைகள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். அதிகமான நீர்ச்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 8 குவளைகள் அல்லது 2 லிட்டருக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கவும்; பழச்சாறுகள் மற்றும் சூப்களும் மூல நோயை கட்டுப்படுத்த உதவுகின்றன. மது வகைகள், பொறித்த அல்லது காரணமான உணவுகளை எடுத்துக்கொள்ளவே கூடாது. இவற்றை பின்பற்றினாலே மூல நோயை விரட்டிவிட முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share