நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நமது ஆயுள் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விட நாம் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்பதே முக்கிமாக உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் செரிமானத்திற்கு உதவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுக்கும் என்பதை மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதய ஆரோக்கியம் மேம்பாடு, வலுவான குடல் இயக்கத்திற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நீண்ட ஆயுளுக்கு நார்ச்சத்து ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான நான்கு காரணங்களை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி லண்டன் விரிவாக விளக்கியுள்ளார்.
கொழுப்பை நிர்வகிக்கும் நார்ச்சத்து உணவுகள்
உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதால் இதய பாதுகாப்பு மேம்படுகிறது. நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்புகளை (LDL cholesterol) குறைக்கின்றன. அத்துடன் இன்சுலின் சுரப்பையும் சரியான அளவில் நிர்வகிக்கிறது. அதிக நார்ச்சத்துகள் கார்டியோ வாஸ்குலர் நோய்க்கான ஆபத்தை குறைக்கின்றன. ஓட்ஸ், பருப்பு வகைகள் உள்ளிட்ட கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பித்த அமிலங்களை பிணைத்து கொழுப்பு உருவாகாமல் தடுக்கிறது. நார்ச்சத்துக்கள் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலைக் குறைக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
நார்ச்சத்துகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல், டைக்குலர் நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் அபாயம் குறைகிறது. நார்ச்சத்து சாப்பிடும் நபர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய்க்கு முந்தைய நிலையான டிஸ்டல் கோலோரெக்டல் அடினோமாக்களை உருவாக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளது. மலத்தின் அளவை அதிகரிப்பது, மலம் கழிக்கும் நேரம் குறைவது, பெருங்குடல் செல்கள் புற்றுநோய்க்கு ஆளாகாமல் தடுப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குடல் நுண்ணுயிரிகள் ஆரோக்கியம் அதிகரிப்பு
நார் சத்துக்கள் நிறைந்த பொருட்கள் குடல் நுண்ணுயிரியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. நொதிக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் குடல் பாக்டீரியாவை வளர்க்கின்றன. அவை கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இதனால் குடலில் உள்ள வீக்கம் குறைகிறது. ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன.
எடை மேலாண்மை
நார்ச் சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது மன நிறைவை அதிகரிப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கவும் உதவுகிறது. அதாவது நார்ச்சத்துக்கள் ஒருவரை வயிறு நிறைந்துவிட்டது என்பதை உணர வைக்கிறது. நார்ச்சத்து உணவுகள் பிஎம்ஐ-யை சரியாக நிர்வகிக்கவும் மற்றும் நீண்ட கால எடை கட்டுப்பாட்டுடன் இருக்கவும் உதவுகிறது.அதிக நார்ச்சத்து சாப்பிடுபவர்கள், குறைந்த நார்ச்சத்து சாப்பிடுபவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வில், நார்ச் சத்து சாப்பிடுபவர்களுக்கே உடல் கொழுப்பு மற்றும் உடல் எடையின் அளவுகள் கணிசமாக குறைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நாம் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை நாம் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு வழிவகுக்கும்.
