அமிதாப்- தர்மேந்திரா போல சூர்யா-கார்த்தி?

Published On:

| By Kavi


தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இணையும் புதிய படம் பற்றி தகவல் வந்துள்ளது.
தமிழ் சினிமா நட்சத்திரங்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பிகளாகப் படத்தில் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இதுகுறித்து பேட்டிகளில் அவர்களிடம் கேள்வி எழுப்பும் போது சரியான கதை அமையும் போது நிச்சயம் இணைந்து படங்கள் நடிப்போம் எனத் தெரிவித்து வந்தனர்.
அதற்கான பணிகள் தற்போது தொடங்கி விட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் கதை என்பதால் நிச்சயம் ரசிகர்களிடையே வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பு இருக்கும். அதனால், திரைக்கதையை யாரிடம் எழுத கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்கள். மேலும் இந்த கதையில் நடிகர் சிவக்குமாரும் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். அண்ணன் – தம்பி இருவரும் சேர்ந்து நடித்தாலும் நட்பினை அடிப்படையாக கொண்டு தான் கதை இருக்கும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
‘ஷோலே’ படத்தில் அமிதாப்- தர்மேந்திரா நட்பு கூட்டணி போல இந்த கதை இருக்க வேண்டும் என்பது தான் கார்த்தி- சூர்யா இருவரின் விருப்பமாம். இதற்கான வேலைகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. மேலும் இந்த படம் திரையரங்குகளுக்கானதாக இல்லாமல் ஓடிடியில் தயாரிப்பு பொறுப்புகளை கொடுத்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கிறதாம். இதனால் முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சு வார்த்தையும் நடக்கிறதாம்.
இதற்கு முன்பு சூர்யாவின் தயாரிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’, ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ என பல வெற்றி படங்களை அமேசான் ஓடிடி நிறுவனம் வாங்கி வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது. அதனால் அமேசானே இருவர் இணையும் படத்தையும் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது சினிமா வட்டாரத்தில்.

ஆதிரா

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share