வைஃபை ஆன் செய்ததும் இன்று மார்ச் 24ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சுமார் ஒரு வருட காலமாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த 2024 செப்டம்பர் 26ஆம் தேதி ஜாமீன் அளித்தது உச்சநீதிமன்றம். supreme court warning Sendhilbalaji
அதையடுத்து செப்டம்பர் 29ஆம் தேதியே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவர் அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, ‘அமைச்சராக பதவியில் தொடர்வதை செந்தில் பாலாஜி விரும்புகிறாரா இல்லையா என்று நாங்கள் அறிய விரும்புகிறோம். எஸ் ஆர் நோ தெளிவாக சொல்லுங்கள்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
ஆனபோதும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.
இந்த பின்னணியில் வழக்கு இன்று மார்ச் 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ‘எழுத்து ரீதியாக பதில் சொல்வதற்கு எங்களுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும். ஏனென்றால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் முதல் பிரதிவாதியான தமிழ்நாடு அரசுக்கு தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இரண்டாவது பிரதிவாதியான எனது கட்சிக்காரர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முறைப்படி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை. எனவே செந்தில் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவை’ என்று வாதிட்டார் முகுல் ரோகத்கி. supreme court warning Sendhilbalaji
இந்த வாதத்தை கேட்டதும் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஓகா கோபமாகிவிட்டார்.
‘செந்தில் பாலாஜிக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றால் கடந்த சில அமர்வுகளாக இந்த வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக நீங்கள் எப்படி ஆஜரானீர்கள்? இது போன்ற டெக்னிக்கல் விஷயங்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்தோடு விளையாடலாம் என நினைக்காதீர்கள். உங்களுடைய இந்த வாதம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கு விசாரணைக்காகவே எங்களுடைய வழக்கமான அமர்வின் முன்பாக வந்துள்ள வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்.
இதுதான் உங்களுக்கு இறுதி வாய்ப்பு. இன்னும் பத்து நாட்களுக்குள் நீங்கள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அழுத்தம் திருத்தமாக உத்தரவு போட்டார்கள்.
அதாவது செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா இல்லையா? அல்லது அது பற்றிய அவரது சட்ட ரீதியான விளக்கத்தை ஏப்ரல் முதல் வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் என்ன பதில் அளிப்பது என்ற ஆலோசனைகள் தமிழ்நாடு அரசு தரப்பிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலும் தீவிரமாக நடந்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு கூட சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்றார். அங்கே தன்னுடைய வழக்கறிஞரான முகுல் ரோகத்கியை சந்தித்து விட்டு வந்தார்.
இன்று உச்சநீதிமன்றம் இப்படி ஒரு கிடுக்குப்பிடியை போட்டிருக்கிற சூழலில்… இது சட்டரீதியாக செந்தில் பாலாஜிக்கு கெடுவாக இருந்தாலும் அரசியல் ரீதியாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட கெடுவாகவே பார்க்கப்படுகிறது.
செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர சட்ட ரீதியாக உரிமை உள்ளது என்றும், இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்யும் நிலைக்கு நாமே தள்ளிட வேண்டாம் என்றும் இருவேறு கருத்துகள் திமுக வழக்கறிஞர்களிடையேயான விவாதத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.
எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிகரித்துள்ளது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப். supreme court warning Sendhilbalaji