துணைவேந்தர் நியமன வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Supreme Court TET

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதலமைச்சருக்கு வழங்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 4) அந்தத் தடையை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கியது. இந்த சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலியைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் வெங்கடாசலபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோயமல்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், 6 வார காலத்திற்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள காலத்தில் துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share