சென்னையில் உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதியிடம் முதல்வர் கோரிக்கை!

அரசியல்

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் நிறுவப்படவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார்

வெள்ளி விழா

மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா இன்று (ஆகஸ்டு 6) சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலர்   கலந்துகொண்டனர்.

ஆட்சியர்களுக்கு விருது

மாநிலத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு பரிசுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். இதே போன்று கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கினார். பின்னர் மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா சிறப்பு நூலை வெளியிட்டு பேசிய அவர், 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு கலைஞரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மாநில மனித உரிமை ஆணையம் என்றார்.

அறிவிப்புகள்

அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமே மனித உரிமைகளை காப்பது தான் என்று கூறிய முதலமைச்சர் திமுக அரசு மனித உரிமைகள், பண்புகளை காப்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கும் என்றார். மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். 

ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆணையத்தின் விசாரணைக்குழுவில் காவல்துறை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், விளிம்புநிலை மக்களுக்காக போராடுபவர்களை மனித உரிமை ஆணையத்தில் ஈடுபடுத்துவது பற்றி ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமை பற்றிய தகவல்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்படும். மனித உரிமை கொள்கை, கோட்பாடுகள், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைத்துதரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். எந்த தனிமனிதனின் உரிமையும் மீறப்படக்கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுப்படுத்தப்படக்கூடாது. இதற்கு காரணமான யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடாது. இவை மூன்றும் தான் இந்த அரசின் மனித உரிமைக் கொள்கை ”என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நீதிபதிகளுக்கு கோரிக்கை

இதேபோன்று, “பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் நிறுவப்படவேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவரவேண்டும்” என்று தான் பேசுகையில் நீதிபதிகளிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். விரைவில் இந்த கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

கலை.ரா.

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.