102 அடியை எட்டிய பவானிசாகர் அணை! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Published On:

| By Minnambalam

பவானிசாகர் அணையில் இருந்து 12,338 கன அடி உபரி நீர் 18 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ளது கீழ்பவானி அணை. தென்னிந்தியாவில் மிகப்பெரிய இரண்டாவது அணையாக திகழ்கிறது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணை, 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

அணையில் இருந்து உபநீர் திறக்கப்படாமல் அணைக்கு வரும் நீர்வரத்து சேமிக்கப்பட்ட நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறையாமல் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக அணை தற்போது 102 அடியை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் , உபரி நீர் பவானி ஆற்றில் இன்று ( ஆகஸ்ட் 5 ) திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பலியான கபடி வீரர்: நிதியை அள்ளித் தந்த ஆர்.கே.சுரேஷ்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share