லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகி இருக்கிறது. அதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஏரியா உரிமை, தொலைக்காட்சி, ஓடிடி ஒளிபரப்பு உரிமைகள் சம்பந்தமான வியாபார வேலைகள் நடந்து வருகின்றன.
பொன்னியின் செல்வன் தெலுங்குப் பதிப்பு உரிமையை, தெலுங்கு சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தில்ராஜு வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இடையே வந்து கைப்பற்றிய சன்
இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பான வலைத்தள ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றைப் பெற கலைஞர் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென உள்ளே நுழைந்த சன் தொலைக்காட்சி, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிகம் கொடுத்து வியாபாரத்தை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய வெளியீடு ஆகிய உரிமைகளுக்காக சன் தொலைக்காட்சி கொடுத்துள்ள விலை ஐம்பதுகோடி என தகவல் வெளியாகியுள்ளது.

வியாபாரம் என்று வந்துவிட்டால்…
கலைஞர் தொலைக்காட்சி பேசிக்கொண்டிருந்த ஒரு வியாபாரத்தை அதிரடியாக உள்ளே புகுந்து கைப்பற்றியிருப்பது பற்றி தொலைக்காட்சி, ஓடிடி, வெளிநாட்டு விநியோக உரிமைகள் வியாபாரத்தை முடித்து கொடுக்கும் மீடியேட்டர்களிடம் பேசியபோது, “இது எதிர்பார்த்த ஒன்று தான் வியாபாரம் என்று வந்துவிட்டால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சொந்தம் என்கிற எதற்கும் இடங்கொடுக்க மாட்டார்கள். பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவில் காலங்கடந்தும் தவிர்க்க முடியாத படமாக இருக்கும்.
அதனால் அந்தப் படத்தின் உரிமை தங்களிடம் இருப்பதை சன் தொலைக்காட்சி கெளரவமாக கருதுகிறது. அதனால்தான் அதிக விலை கொடுத்து உரிமையை கைப்பற்றியுள்ளது” என்கின்றனர்.
இராமானுஜம்

Comments are closed.