ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
2001-2006ம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக 1.77 கோடி சொத்து குவித்ததாக 2006ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2011ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டது.
இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததால், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று(அக்டோபர் 29) தீர்ப்பு வழங்கிய அவர், “சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
இவ்வழக்கை மதுரை எம்.பி எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
வரும் நவம்பர் 27ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை நான்கு வாரங்களில் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சிவகங்கை நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆவணங்களை பெற்ற பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அவர்கள் நேரில் ஆஜராகும் போது பிணை பத்திரத்தை பெற்று ஜாமீன் வழங்கலாம். வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்து வழக்கை விசாரிக்க வேண்டும்.
வழக்கின் விசாரணையை தினம்தோறும் நடத்தி 2025 ஜூன் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அது குறித்து உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தவெக உடன் காங்கிரஸ் கூட்டணியா?: செல்வப்பெருந்தகை சொன்னது என்ன?
6 மாதங்களில் பாகிஸ்தானை விட்டு ஓடிய கோச் கேரி கிரிஸ்டன்.. என்ன காரணம்?