பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் யார்? ஃபில்டர் செய்யும் அறிவிப்பு!

Published On:

| By Aara

உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 10) இரவு சென்னை வரும் நிலையில், தமிழக பாஜக உட்கட்சித் தேர்தலின் கிளைமாக்ஸாக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் பற்றிய அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. state president of BJP Filtering announcement

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சித் தேர்தலில் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தி இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ‘பாரதிய ஜனதா கட்சியின் கிளை தொடங்கி மாவட்ட தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்போது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஏப்ரல் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள சக்கரவர்த்தி…

மாநிலத் தலைவருக்கான விண்ணப்பம் வழங்குவதற்கு தகுதிகள் என்னென்ன என்பதையும் இந்த அறிவிக்கையில் வரையறுத்துள்ளார்.


அதன்படி, “மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும்.
மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் இருப்பவர்கள் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள்.

ஒவ்வொரு விருப்ப மனுவிலும் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் பரிந்துரை தேவை”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பருவம் என்றால் மூன்றாண்டுகள். அதாவது ஒன்பது வருடங்கள் தீவிர உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். 10 வருடங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி பார்த்தால் இப்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கு விருப்ப மனு அளிப்பதற்கே தகுதி இல்லாமல் போய்விடும். அதேபோல பாஜக மாநில தலைவர் பதவிக்காக காய் நகர்த்துகிற நயினார் நாகேந்திரனும் கடந்த 10 வருடத்துக்குள், அதாவது 2017 இல்தான் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவுக்கு வந்தவர். அதனால் அவருக்கும் மாநிலத் தலைவர் ஆக தகுதி இல்லை.

முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 2019-ல் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார், இதையடுத்து அவர் தனது பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார்.

மீண்டும் அவர் 2024 மார்ச் மாதம் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். state president of BJP Filtering announcement

எனவே 2019 முதல் 24 வரையிலான ஐந்தாண்டுகள் தமிழிசை பாஜகவின் உறுப்பினராக இல்லை.

இந்த தகுதிகளின்பார்த்தால் தமிழிசையும் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆகிடுவார்.

தற்போதைய பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்,1989 இல் இருந்தே சங் பரிவார உறுப்பினராக உள்ளார். எனவே ஒரு பெண்ணாக, அவருக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியை பெறுவதற்கான தகுதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன என்ற பேச்சும் கமலாலய வட்டாரத்தில் உலவுகிறது.

ஆக ஆர் எஸ் எஸ் பின்னணி கொண்ட பாஜகவில், நீண்ட பயணத்தை மேற்கொண்டவர் தான் மாநில தலைவராக ஆவார் என்பதைத்தான் இந்த அறிவிப்பு எடுத்துக்காட்டுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share