ஸ்ரீராம் சர்மா
இன்றைய கவர்னரும் காவி உடை அணிந்த திருவள்ளுவரை மீண்டும் முன் நிறுத்த, அதனை வழி மொழிந்து நேற்று வெளியிட்ட தனது வீடியோ ஒன்றில், “திருவள்ளுவருக்கு முதலில் காவி உடைதான் இருந்தது. திருவள்ளுவருக்கு வெள்ளை உடை போட்டது கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான். கருணாநிதி ஆட்சிக்காலத்துக்கு முன்பு திருவள்ளுவர் வெள்ளை உடையில் இருந்தார் என காட்டுங்கள் பார்க்கலாம்? என அந்த வீடியோவில் இரண்டு மூன்று முறை அடித்துப் பேசி இருக்கிறார் திரு. ரங்கராஜ் பாண்டே, வழக்கம்போல…
ஏற்கெனவே இப்படி ஒரு பிரச்சினை வந்தபோது – அந்த திருவுருவத்தை வரைந்தவரின் மகன் என்னும் முறையில் அதன் உண்மை வரலாறை விளக்கி – தந்தி, விகடன் உட்பட பல சேனல்களுக்கு நீண்ட பேட்டியை அளித்திருக்கிறேன். ஆதாரங்களுடன் மின்னம்பலத்தில் மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
ஆனாலும், பாண்டே உட்பட சிலர் ‘கொக்குக்கு ஒரு மதி’ என்பதுபோல் எதையுமே பார்க்க மாட்டோம், எதையுமே படிக்க மாட்டோம். எங்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாக சொல்லிச் செல்வோம்’ என அடம்பிடித்தால் என்னதான் செய்வது?
ஆயினும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தவறான தகவல்கள் வரலாறாகச் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதால் – எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக பதிய வைக்கிறேன்.
******

திருவள்ளுவர் திருவுருவம் வரைந்து முடிக்கப்பட்டது 1959 ஆம் ஆண்டில். தனது பல்லாண்டுக் கால ஆய்வின் அடிப்படையில் வரைந்து முடித்தவர் ‘ஓவியப் பெருந்தகை’ கே.ஆர்.வேணுகோபால் சர்மா. வரைந்து முடிக்கப்பட்ட இடம், மயிலாடுதுறை மதீனா லாட்ஜ். அன்று ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். முதலமைச்சராக அமர்ந்திருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
கம்பீரமான வெள்ளுடையோடு, சாதி – சமய – மதக் குறிகள் ஏதுமின்றி ‘ஓவியப் பெருந்தகை’ கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்ட அந்த திருவுருவத்தை 1960 ல் மத்திய மாநில அரசுகள் அங்கீகரித்தது மட்டுமின்றி பேரறிஞர் அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, கலைஞர், டாக்டர் சுப்பராயன், மு.வ. கி.ஆ.பெ, பாவேந்தர் பாரதிதாசன், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கவியரசர் கண்ணதாசன், திருமுருக கிருபானந்த வாரியார், சாண்டில்யன், எஸ்.எஸ். வாசன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி உட்பட எண்ணற்ற பெரியவர்கள் கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் சென்னை இல்லத்துக்கு நேரில் வந்து கண்டு…
“இவர்தான் எல்லோருக்கும் பொதுவான திருவள்ளுவர் – ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஓதிச் சொன்ன அறிவாசானுக்கு இதுவே சாலப் பொருந்தும் திருவுருவம் ஆகும்…” என வாழ்த்தி ஆமோதித்ததுதான் நிஜமான வரலாறு.
அத்தனைக்கும் புகைப்பட – ஆடியோ ஆதாரங்கள் உள்ளன.
அப்படியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உலகமெங்கிலும் பரவி நிற்கும் அந்தத் தூய திருவுருவத்தின் வரலாறை உண்மைக்கு மாறாக மாற்றிச் சொல்வது மூத்த பத்திரிக்கையாளர் என்னும் அடைமொழியை தாங்கும் பாண்டே அவர்களுக்கு அழகாகுமா? இது குறித்து அவருக்கு விவரம் தெரியாது என்றாலது நம்புவதற்கில்லை. ஒருவேளை, உண்மையாகவே அறியாதவராக இருந்திருந்தால் என்னைப் போன்றவர்களிடம் விசாரித்துக் கொண்டு பின் பேசியிருக்கலாம்.
குறிப்பு 1:
கலைஞர் ஆட்சியில் அமர்ந்தது 1969 ல் தான். அதாவது திருவள்ளுவர் திருவுருவம் வரைந்து முடிக்கப்பட்டு – இரண்டு அரசாங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏறத்தாழ பத்தாண்டுக் காலம் கடந்தபின்புதான்.
குறிப்பு 2:
அந்த வீடியோவில் திருவள்ளுவருக்கு சமத்துவ உருவம் கொடுத்தவரின் பெயரையே சொல்லாமல் தவிர்த்து விட்டது ஏன்?
அவரது பெயர் கே.ஆர்.வேணுகோபால சர்மா என்பது தெரிந்து விட்டால் தங்கள் தரப்பு வலுவிழந்துவிடும் என்றுதான் அபாண்டமாக கலைஞரை எதிரில் வைத்து நெடியேற்றப் பார்க்கிறார்களோ? நிஜத்தைப் பற்றிக் கவலையில்லை எங்களுக்கு அஜண்டாதான் முக்கியம் என்கிறார்களோ?
இல்லையெனில், இனியாவது “திருவள்ளுவரின் வெண்மை” என்னும் தலைப்பில் திருவள்ளுவர் ஏன் வெள்ளுடை உடுத்தியிருக்கிறார் என்பது குறித்த எனது ஆய்வுக் கட்டுரையை படித்தால் நலம்!
குறிப்பு 3:
இதில் காணும் புகைப்படம் எடுக்கப்பட்டது 1960ல். இடம்: கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் சென்னை இல்லம். புகைப்படத்தில் இருப்பவர்: பெரும்புகழுடைய இந்துமதக் கொழுந்தாகிய திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.
(வாரியார் ஸ்வாமிகளையும் கடந்து ஒளிவீசும் இந்துமதக் காவலர்கள் நாங்கள் என அந்தரத்தில் பம்பரம் விடுபவர்களுக்கு சொல்லிப் புரியவைக்கும் சக்தி எனக்கில்லை.)
குறிப்பு 4:
இந்த ஆண்டு, 2026 ஜனவரி மாதம், அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் வரைந்து முடிக்கப்பட்ட மயிலாடுதுறை மண்ணில் – அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாளில் – கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள் திருவள்ளுவரை வரைவது போன்ற ஆறு அடி புகைப்படத்தை உயர்த்திப் பிடித்தபடி மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தினரும் – மயிலாடுதுறை திருக்குறள் பேரவையினரும் நகர்வலமாய் வந்து நன்றி கொண்டாடியதும் இதே தமிழ் மண்ணில்தான்!
பேரன்புடன்,
ஸ்ரீராம் சர்மா
எழுத்தாளர் – தியேட்டர் இயக்குனர்
‘ஓவியப்பெருந்தகை’
கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் மகன்

