தமிழகத்தின் முதல்வராகக் கடந்த மே 10-ம் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, நேற்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அப்போது எதிர்க்கட்சியான தி.மு.க-வைக் கடுமையாகச் சாடிய விஜய், அ.தி.மு.க-வின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், வழக்கம்போல் “மற்றும் பலர்” எனக் கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“திருச்சி கூட்டத்தில் பேசும்போது, ‘நீங்கள் கூடக் கேட்டு இருக்கிறீர்களே, இன்னும் கொஞ்சம் ஆதரித்து இருந்தால் நல்லா இருந்திருக்குமே’ என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கான உங்கள் தியாகத்தை கொஞ்சம் சொல்லுங்கள் தம்பி. உங்கள் போராட்டக் களத்தைச் சொல்லுங்கள்; உங்கள் உழைப்பைச் சொல்லுங்கள். நீங்கள் எந்த உழைப்பையும் கொடுக்கவில்லை.
எங்கே இருந்தீர்கள்
தமிழ்நாட்டில் கஜா புயல், வர்தா புயல், தானே புயல், சுனாமி போன்ற எத்தனையோ பேரிடர்கள் ஏற்பட்டபோதெல்லாம் விஜய் தம்பி நீங்கள் எங்கே இருந்தீர்கள்? மாங்காய் பறித்துக் கொண்டு இருந்தீர்களா என்ன? உங்கள் பேச்சுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டபோது தமிழ்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற யார் உழைத்தது? நீங்கள் களத்தில் இறங்கி தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொடுத்தீர்களா? இல்லை, தமிழர்களின் ஜீவாதார உரிமைகளாக உள்ள முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவு போன்ற விவகாரங்களுக்காகப் பெரிய அளவில் சட்டப் போராட்டத்தை நடத்தி, விவசாயிகளுடன் நின்று உரிமைகளை மீட்கப் பாடுபட்டீர்களா விஜய் தம்பி? இல்லை. இளைய சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நீங்கள் என்ன வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
சிறுவயதில் திரைப்படத்தில் நடித்து சன்மானம் வாங்கி, இப்போது தனி விமானத்தில் செல்லும் வகையில் உங்கள் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கிறீர்கள். இதுதானே நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கும் தியாகம்? என்னப்பா இது, உங்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை. திருச்சியில் உங்களைப் பார்க்கவே முடியவில்லை; உலக அதிசயமாக இருக்கிறது.
திருச்சியில் நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்கு வந்தீர்கள், சரி. உங்களுக்கு மக்கள் வரவேற்புக் கொடுத்தார்கள், அதுவும் சரி. ஆனால், திருச்சி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உருப்படியாக ஏதாவது ஒரு செய்தியைச் சொன்னீர்களா விஜய் தம்பி? மேகதாது அணைப் பிரச்சினை பற்றி ஏதாவது சொன்னீர்களா? தமிழகமே போராட்டக் களமாக உள்ள பயிர் கடன் தள்ளுபடி பிரச்சினைக்கு ஏதாவது நீங்கள் தீர்வு சொன்னீர்களா?
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, மின்சாரத் தடை, போதைப்பொருள் நடமாட்டம், குடிநீர் பஞ்சம் என அனைத்தும் நிலவி வருகிறது. இதையெல்லாம் 25 நாட்களில் சீர் செய்ய முடியும் என்று நாங்கள் சொல்லவில்லை. நிச்சயமாக விஜய் தம்பி சொல்வதைப் போல 20 நாட்களில் ஒன்றும் முடியாது.
ஆனால், இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதையாவது நீங்கள் தேர்தல் களத்தில் பேசினீர்களே… அதற்கெல்லாம் தீர்வு காண நான் என்ன திட்டம் வைத்திருக்கிறேன், எனக்கு அதிகாரத்தைக் கொடுத்த மக்களுக்கு நான் என்ன பாதுகாப்பு கொடுக்க உள்ளேன், என்ன செய்யப் போகிறேன் என்பதையாவது சொல்ல வேண்டாமா? இன்னும் நடிகராகவே இருந்து தமிழ்நாட்டு மக்களிடத்தில் நடித்துக் கொண்டு இருந்தால் எப்படி தம்பி விஜய்? நீங்கள் எப்போது முதல்வராகப் பொறுப்பேற்கப் போகிறீர்கள்?
எங்கள் நேரம்
முதல்வராக வந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டு, இன்னும் நடிகராகவே இருந்து எல்லோரையும் விமர்சனம் செய்கிறீர்களே! அதிலும் அ.தி.மு.க-வை நீங்கள் கிள்ளுக்கீரை போன்று நினைக்கிறீர்கள். எங்கள் நேரம், எங்கள் காலம் வரும்.
இது புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சி; அம்மா உயிரைக் கொடுத்து வளர்த்த கட்சி. புரட்சித் தமிழர் ஒரு சாமானியராக இன்று இந்த இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடத்தில் உங்களைப் போன்ற சினிமா கவர்ச்சி இல்லை. அவருக்கு சினிமா கவர்ச்சி இல்லாததால் நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?
அ.தி.மு.க-வை அபகரிக்க நினைக்கிறீர்கள், அழிக்க நினைக்கிறீர்கள். உங்கள் ஆணவமும் அகம்பாவமும் பேச்சில் தெரிகிறது விஜய் தம்பி. மாண்புமிகு முதல்வரே, அ.தி.மு.க-வை இன்னும் ஏளனம் செய்யுங்கள்; இன்னும் அசிங்கப்படுத்துங்கள்; எங்களைக் கேவலப்படுத்துங்கள்; எங்களை உதாசீனப்படுத்துங்கள்; எங்களை அவமானப்படுத்துங்கள். அப்போதுதான் அ.தி.மு.க-வின் சிங்கக் கூட்டம் சிலிர்த்தெழுந்து உங்களைச் சிதறடிக்கும் காலத்தை அ.தி.மு.க விசுவாசத் தொண்டர்கள் உருவாக்குவார்கள்.
இன்னும் போதாது, நீங்கள் கேவலப்படுத்துங்கள், அசிங்கப்படுத்துங்கள். ‘மற்றும் பலர்’ என்று சொல்லுங்கள், பெயரை உச்சரிக்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அவதார புருஷர். நீங்கள் அ.தி.மு.க பெயரைச் சொல்லிவிட்டால், பொதுச் செயலாளரைச் சந்தித்துவிட்டால், அவர் பெயரைச் சொல்லிவிட்டால் அவருக்கு விளம்பரம் கிடைத்துவிடும் ஏனென்றால் நீங்க சினிமா நடிகர்” என தனதுஆதங்கத்தை ஆர்.பி. உதயகுமார் வெளிப்படுத்தியுள்ளார்.
