உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவதாக நேற்று (செப்டம்பர் 16) அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச விளையாட்டு விளையாட்டு வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் உலகில் மிகப்பெரிய சாதனையாளராக கருதப்படும் ஃபெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை (8) வென்று சாதனை படைத்தவர். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர்.
அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தான் தன்னுடைய கடைசி போட்டியாக இருக்கும் என்றும், அத்துடன் கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஏடிபி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் கூறியுள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது!
இதுகுறித்து ஃபெடரர் வெளியிட்ட அறிக்கையில், ”எனக்கு 41 வயதாகிறது. நான் 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை உச்சத்தில் வைத்துள்ளது.
இப்போது நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதால் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன். அதிர்ஷ்டவசமாக, நான் பல்வேறு சிறப்பு வாய்ந்த போட்டிகளை விளையாடி இருக்கிறேன். நிச்சயம் அவற்றை நான் மறக்க மாட்டேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் உடனிருந்த சகபோட்டியாளர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
உங்களுடன் விளையாடியது என் பாக்கியம்!
ரோஜர் பெடரின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஃபெடரரின் சக போட்டியாளரும், ஸ்பெயின் வீரருமான ரஃபேல் நடால், பெடரரின் ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,” எனது அருமை நண்பரும், போட்டியாளருமான பெடரர், ஓய்வை அறிவிக்கும் இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன்.
இந்த நாள் எனக்கும், விளையாட்டிற்கும் மிகுந்த சோகமான தினமாகும். இத்தனை ஆண்டுகளாக களத்திலும், களத்திற்கு வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில், மகிழ்ச்சி மற்றும் பெருமை என்பதை தாண்டி, அதனை எனக்கான மிகப்பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

எதிர்காலத்தில் நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள இன்னும் பல தருணங்கள் இருக்கிறது, ஒன்றாக இணைந்து செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, அது நமக்கும் தெரியும். இப்போதைக்கு, உங்கள் மனைவி மிர்கா, உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எதிர்வருவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். நான் உங்களை லண்டனில் சந்திக்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் லண்டனில் நடைபெற இருக்கும், லேவர் கோப்பையில் ஃபெடரர் போட்டியாளர்களான ரஃபேல் நடால், ஜோகோவிச், ஆண்டி முர்ரே ஆகியோர் அனைவரும் ஐரோப்பிய அணியின் கீழ், ஒன்றாக விளையாட உள்ளனர். லேவர் கோப்பை என்பது ஐரோப்பிய அணியும், உலக அணியும் மோதிக்கொள்ளும் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு கழகத்திற்கு வரவேற்கிறேன்!
அதேபோல் சமீபத்தில் டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்ற 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மற்றொரு ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ், “டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் சிறப்பாகவே செயல்பட்டீர்கள். அது போல தான் உங்களது ஓய்வு அறிவிப்பும் வந்துள்ளது. உங்கள் விளையாட்டை பார்த்து நான் ரசித்திருக்கிறேன்.
நம் பாதைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தன. எனக்கு உட்பட நீங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் இருந்துள்ளீர்கள். அதனை ஒருபோதும் மறக்க மாட்டோம். எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கிறேன். உங்களை ஓய்வுபெறும் கழகத்திற்கு வரவேற்கிறேன். வாழ்த்துகள் ரோஜர் ஃபெடரர்.” என்று தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் பிராண்டாக மாறிவிட்டீர்கள்!
ரோஜர் ஃபெடரரின் மிகப்பெரிய ரசிகரான இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “என்ன ஒரு அர்ப்பணிப்பு, ரோஜர் பெடரர்! டென்னிஸ் பிராண்டாக மாறிய உங்களை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் எங்களுக்கு பழக்கமாகிவிட்டது. அது ஒருபோதும் விலகாது. அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி” என்று அதில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் உலகின் பல்வேறு விளையாடு வீரர்களும், அவரது ரசிகர்களுக்கும் ரோஜர் ஃபெடரருக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
