ADVERTISEMENT

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடி விபத்து: ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

SJ Surya

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள ஒரு மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்குவதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் சண்டைக் காட்சி படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த உடனே அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மதன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சக்திவேல், சூர்யா மற்றும் தினகரன் ஆகிய மூன்று பேர் படுகாயங்களுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படப்பிடிப்புத் தளத்தில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதன் முதற்கட்டமாக, படப்பிடிப்பிற்கு கேஸ் சிலிண்டர்களை சப்ளை செய்த ஒப்பந்ததாரர் ராமு மற்றும் அதன் பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகிய இருவரையும் ஓட்டேரி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து படக்குழுவினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share