இசைஞானி இளையராஜா இன்று (ஜூன் 2)தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலையிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பலரும் இளையராஜாவுக்கு அன்பளிப்புகளை வழங்கி, அவரிடம் ஆசீர்வாதம் பெற்றதோடு, புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை உலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துப் பதிவில், “இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் அவருக்குப் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் ஹார்மோனியம் (Harmonium) கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் அமைதியை (Harmony) விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டித் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
வீடியோ மூலம் இளையராஜா நன்றி
இதற்கிடையே, தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நேரில் வந்திருந்தும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ள உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார், அவருக்கு என்னுடைய பிரத்யேக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்து நாடு முழுவதிலிருந்தும் வந்து வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
