இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரபல நடிகரும் இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் தனது மகன் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தாமதத்திற்கான காரணம் குறித்துப் பேசியது இணையத்தில் வைரலானது. மேலும், கங்கை அமரன் நடிகர் சிவகார்த்திகேயனைக் குறிப்பிட்டவில்லை. ஆனால் அவர் நடிகர் சிவகார்திகேயனைத்தான் சொல்வதாக பலரும் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பதிவில் “சிவகார்த்திகேயன் எப்போதும் எனது நண்பர்; என் சகோதரர் போன்றவர். அவரைப் பற்றிப் பல ஊகங்களும் சர்ச்சைகளும் பேசப்பட்டு வருகின்றன. ஒரு தந்தையாகத் தனது சொந்த மகனின் படம் தாமதமாகும் போது, அவருக்கு ஆதங்கமும் மனவருத்தமும் ஏற்படுவது இயல்பு. அவருக்கு இந்த விஷயத்தில் முழுப் பின்னணியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனது தொழில் தொடர்பான விஷயங்களைத் தந்தை உள்ளிட்ட யாருடனும் நான் விரிவாக விவாதிப்பது கிடையாது. பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் முடியாமல் போனது, அவ்வளவுதான். இது எங்களுக்குள் எந்தக் கசப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. காலம் அமையும் போது, நல்ல கதைக்களம் அமையும் போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில் இப்போதும் சொல்கிறேன் நான் உங்களுடைய தீவிர விசிறி என்று கூறி நெகிழ வைத்துள்ளார். அதில், “சார், நாம் ஒரே குடும்பம். இதற்கு நீங்கள் இவ்வளவு சீரியஸாகப் பதிலளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களது வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. உங்களுடைய அடுத்த படத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நான் உங்களிடம் முன்பே இதை சொல்லியிருக்கிறேன், இப்போது மீண்டும் சொல்கிறேன். நான் எப்போதும் உங்களுடைய தீவிர விசிறி . விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
