VIDEO- PHOTO GALLERY: தனுஷ், சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன்.. அரசியல் பற்றி ரசிகர்களிடம் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Sivakarthikeyan

சென்னை போரூர் அருகே சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது.

தமிழ் சினிமா நடிகர்கள் அண்மை காலமாக ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்த நிகழ்வுகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT

அதேபோல நடிகர் சூர்யாவும் கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.

இந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

மொபைலை குறைங்க… புத்தகம் படிங்க

இந்த சந்திப்பு குறித்து ரசிகர்கள் கூறுகையில், “இது புதிதாக நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கிடையாது. ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணன் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நற்பணி இயக்கத்தை எதிர்காலத்தில் எப்படி வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும், அடுத்தடுத்து என்ன மாதிரியான பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களிடம் பேசினார். நாங்கள் ஏற்கனவே செய்து வரும் பல பணிகளையும் பாராட்டினார்.

வரும் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை எங்கள் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். எங்களால் முடிந்த உதவிகளை செய்து, அண்ணனுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து, நாங்களும் நல்ல பெயரை வாங்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்வதுதான் இந்த நற்பணி இயக்கத்தின் முழு நோக்கம். எங்களால் அண்ணனுக்கு எந்தவிதமான கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ADVERTISEMENT

குறிப்பாக மொபைல் பயன்படுத்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளுங்கள் என்று அண்ணன் கூறினார். நிறைய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். உங்களுக்கு பிடித்த புத்தகங்கள், புரட்சிகரமான கதைகளை படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். ஒரு ஹீரோ தனது ரசிகர்களிடம் சமூக வலைதளங்களை பயன்படுத்துங்கள் என்று சொல்வதை பார்த்திருப்போம். ஆனால் அண்ணன் மொபைலை குறைத்துவிட்டு புத்தகங்களை படியுங்கள் என்று கூறியது எங்களுக்கு புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்றார்.

அரசியல்.. கட்சி?

மற்றொரு ரசிகர் மன்ற நிர்வாகி கூறுகையில், “அண்ணன் கட்சி ஆரம்பிப்பதற்கான சூழல் இப்போதைக்கு இல்லை. அவர் இப்போதுதான் படிப்படியாக வளர்ந்து ஒரு மாஸ் ஹீரோவுக்கான இடத்திற்கு வந்திருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இப்போதைக்கு ரசிகர்களாகிய நாங்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அப்படிப்பட்ட சூழல் அமைந்தால், அவர் என்ன மாதிரியான கொள்கைகளையும் நோக்கங்களையும் முன்வைக்கிறார் என்பதை பொறுத்து நாங்கள் ஆதரவு அளிப்போம்” என்றார்.

இதேபோல, “நாள்தோறும் நற்பணி செய்ய வேண்டும் என்று அண்ணன் கூறியிருக்கிறார். எங்கள் ஊர்களில் எங்களால் முடிந்த அளவுக்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். பள்ளிகள், பால்வாடிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். எங்களுடைய நிர்வாகிகள் தலைமையில் இந்த பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றார் மற்றொரு ரசிகர்.

மேலும், “தலைவரைப் பார்க்கத்தான் வந்தோம். இது நிர்வாகிகள் சந்திப்பு. எங்களிடம் நன்றாக பேசினார். தற்போது கொஞ்சம் பிஸியாக இருப்பதால் எங்களால் அதிக நேரம் பேச முடியவில்லை. பின்னர் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது பேசிக் கொள்வோம். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். முதல் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. கிளைமாக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அதில் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக இப்போதைக்கு எதுவும் இல்லை. அதுபற்றி எந்த அப்டேட்டும் அவர் கொடுக்கவில்லை. நாங்கள் 13 ஆண்டுகளாக அவருடன் இருக்கிறோம். அவர் என்ன முடிவு சொல்கிறாரோ, அதற்கு தகுந்த மாதிரி நாங்கள் நடந்து கொள்வோம். அதற்காக காத்திருக்கிறோம்” என்றார் சேலத்தை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி.

படங்கள்:


VIDEO

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share