ஒரே ‘வசனமில்லா படம்’… இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த சிங்கீதம் சீனிவாச ராவ்!

Published On:

| By Mathi

இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் (வயது 95) சென்னையில் காலமானார்.

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் பகுதியில் பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ், சென்னையில் படித்தார். சினிமா மீதான ஆர்வத்தால் பழம்பெரும் இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். புகழ்பெற்ற ‘மாயாபஜார்’ உள்ளிட்ட படங்களில் அவருடன் பணியாற்றினார்.

ADVERTISEMENT

1972-ல் தெலுங்கில் வெளியான ‘நீதி நிஜாயிதி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் அவர் முதன்முதலில் இயக்கிய ‘திக்கற்ற பார்வதி’ 1974-ல் வெளியானது. இந்த படம் தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். ஒரே மாதிரியான படங்களை எடுக்காமல் நகைச்சுவை, அறிவியல் புனைகதை, பேண்டஸி, வசனங்கள் இல்லாத படம் என தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டது அவரது தனிச்சிறப்பு.

ADVERTISEMENT

கமல்ஹாசனுடன் சிங்கீதம் சீனிவாச ராவ் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் கவனம் பெற்றன. கமல்ஹாசனின் 100-வது படமான ‘ராஜபார்வை’யை சிங்கீதம் இயக்கினார். அதைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து ‘புஷ்பக விமானம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

வசனமே இல்லாத ”பேசா படம்”

இதில் வசனங்களே இல்லாமல் எடுக்கப்பட்ட ‘புஷ்பக விமானம்’ இந்திய சினிமாவில் மிக முக்கியமான முயற்சியாக அமைந்தது. கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’, நான்கு வேடங்களில் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ ஆகிய படங்களும் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

தமிழில் ‘மகளிர் மட்டும்’, ‘சின்ன வாத்தியார்’, ‘காதலா காதலா’, ‘லிட்டில் ஜான்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல படங்களையும் சிங்கீதம் இயக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் தனி முத்திரை பதித்தார். பாலகிருஷ்ணாவை வைத்து அவர் இயக்கிய ‘ஆதித்யா 369’ காலப்பயணத்தை மையமாக கொண்ட அறிவியல் புனைகதை படமாக பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னட நடிகர் ராஜ்குமாருடனும் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இயக்குநராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் என சினிமாவின் பல துறைகளிலும் சிங்கீதம் சீனிவாச ராவ் பணியாற்றியுள்ளார்.

இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2011-ல் இந்திய திரைப்பட கூட்டமைப்பு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

90 வயதை கடந்த பிறகும் சினிமாவில் தொடர்ந்து இயங்கி வந்த சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 94-வது வயதிலும் ‘சிங் கீதம்’ படத்தை இயக்கினார். அந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது.

சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவுடன் பயணித்த சிங்கீதம் சீனிவாச ராவின் மறைவுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் உருக்கம்

சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சிங்கீதம் சீனிவாச ராவ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன், “என்னை செதுக்கியதில் அவரும் ஒருவர்” என உருக்கமாக கூறினார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

சிங்கீதம் சீனிவாசராவ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ள இரங்கல்:

சிங்கீதம் சீனிவாசராவ்
மறைந்து விட்டார்

இறுதி நாட்கள் வரை
கலைத் தளத்தில்
இயங்கிக்கொண்டே இருந்த
95 வயதுத் தொன்மம் அவர்

அவர்
இயக்கிய படங்களெல்லாம்
பாடங்களாய் விளங்கத்தக்கவை

ராஜாஜியின்
திக்கற்ற பார்வதியை இயக்கி
தேசிய விருது பெறச்செய்தவர்

ராஜபார்வையின்
அந்தி மழை பொழிகிறது
பாடலை மறக்கமாட்டேன்

இசைக் கவிதையாகிய
அந்தப் பாடலை
நகரும் ஓவியமாய்
வடித்துக் காட்டினார்

கடைசிப் படத்தை
இயக்கிய போது
அவரது வயது 94

ஓர் இந்தியக் கலைஞர்
இறந்துவிட்டார்

எத்துணை
புகழ் பெற்றவராயினும்
இறந்த நாளோடும்
இறுதிச் சடங்கு நாளோடும்
கொடுக்கப்படும் ஊடகவெளிச்சம்
அடுத்த நாளே
அணைக்கப்படுகிறது

அதன் பிறகு மனிதன்
செயல்களால் மட்டுமே
தன்னை நினைவூட்டுகிறான்

சிங்கீதம் சீனிவாசராவின்
கலைச் செயல்கள்
அவரை நினைவூட்டும்

ஆழ்ந்த இரங்கலும்
அஞ்சலியும்

இயக்குநர் சீனுராமசாமி

இயக்குநர் சீனுராமசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி:

இதய அஞ்சலி- தமிழில் நமது கமல்ஹாசன் அவர்களுடனும், கன்னடத்தில் ராஜ்குமார் அவர்களுடனும் அதேபோல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் அனிமேஷன் என 60 படங்களுக்கு மேல் இயக்கிய மூத்த படைப்பாளி.

மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய சுதா சந்திரன் அவர்கள் நடித்த ‘மயூரி’, அப்பு கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்அவர்கள் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ கண்பார்வையற்ற நாயகன் நடித்த ‘ராஜபார்வை’ போன்ற படங்களை இயக்கி என் நெஞ்சில் இடம் பிடித்தவர். 95 வயதில் இயற்கையோடு நிறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்களின் புகழ் வாழ்க.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share