விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் ‘சிக்மா’ எப்படி இருக்கிறது? படத்தை பார்க்க வந்த அம்மா சங்கீதா

Published On:

| By Mathi

Sigma Film

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம், ஷீலா ராஜ்குமார், அன்பு தாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் நேற்று அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வந்தது.

விஜய்யின் மகன் இயக்கும் முதல் படம் என்பதால் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ‘சிக்மா’ மீது எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பணம், சூதாட்டம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றைப் பின்னணியாக கொண்டு ‘சிக்மா’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

படம் தொடங்குவதற்கு முன்பு இயக்குநர் ஜேசன் சஞ்சய்யை அறிமுகப்படுத்தும் சிறப்பு காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.

சந்தீப் கிஷன் பண பிரச்சனையில் சிக்கிய இளைஞராக வருகிறார். அதிலிருந்து வெளியே வர அவர் எடுக்கும் முயற்சி அவரை மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்துகிறது. அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ADVERTISEMENT

படம் எப்படி இருக்கிறது?

ஜேசன் சஞ்சயின் இயக்கம் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

முதல் படத்தை இயக்கும் இயக்குநர் என்ற அடிப்படையில் ஜேசன் சஞ்சயின் காட்சி அமைப்பு மற்றும் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிய விதம் நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினர் பாராட்டுகின்றனர்.

ADVERTISEMENT

படத்தின் இடைவேளை காட்சி, கொள்ளை தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தீப் கிஷனின் நகைச்சுவை, ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது என்கின்றனர்.

அதேநேரம் கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்ட பல படங்களில் ஏற்கனவே பார்த்த காட்சிகளை போல இருப்பதாகவும், கதையில் இன்னும் புதுமை இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘சிக்மா’ படத்தில் அதிகம் பாராட்டப்படுவது சந்தீப் கிஷனின் நடிப்பு. நகைச்சுவை, ஆக்‌ஷன் என இரண்டிலும் அவர் சிறப்பாக நடித்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

‘சிக்மா’வுக்கு முதல் நாளில் கிடைத்துள்ள இந்த கலவையான வரவேற்பு அடுத்தடுத்த நாட்களில் திரையரங்கு வசூலில் எப்படி எதிரொலிக்கிறது என்பது தெரியவரும்.

ஜேசன் சஞ்சய்யின் அம்மாவும் சகோதரியும்

ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை பார்க்க அவரது தாய் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா சாஷா ஆகியோர் சென்னை கமலா திரையரங்குக்கு வந்தனர். மகனின் முதல் திரைப்படத்தை பார்க்க சங்கீதா திரையரங்குக்கு வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஜேசன் சஞ்சயும் அவர்களுடன் திரையரங்கில் இருந்தார்.

சந்தீப் கிஷன் டென்ஷன்

இதனிடையே ‘சிக்மா’ வெளியாகும் முன்பே படம் தொடர்பாக திட்டமிட்ட எதிர்மறை பிரசாரம் நடைபெறுவதாக நடிகர் சந்தீப் கிஷன் குற்றம்சாட்டியிருந்தார். தன்னையும் படத்தையும் குறிவைத்து சிலர் செயல்படுவதாக கூறிய அவர், அதன் பின்னணியில் இருப்பவர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share