தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுக்காத நிலையில் அக்கட்சி உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறது.
தமிழக தேர்தலில் 108 இடங்களை தவெக பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் தனிப்பெரும் கட்சியாக தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் (விஜய் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதால் 107). காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆளுநர் அர்லேகரை நேற்று விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் மெஜாரிட்டிக்கான 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநர் அர்லேகர், விஜய்யிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்று மே 7-ந் தேதி விஜய் முதல்வராக பதவியேற்க திட்டமிட்டிருந்தது ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்தித்து பேசினார்.
இதனிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தவெக நாட இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி இந்த சிக்கல் தொடர்பாக கூறியிருப்பதாவது: தவெக உச்சநீதிமன்றத்துக்கு போகிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அரசியல் சாசனத்தின் அனைத்து கதவுகளுமே திறந்தே இருக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாக்க வேண்டியவர் ஆளுநர். தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எந்தக் கேள்வியும் இல்லை. சட்ட முன்னுதாரணம், பாரம்பரியம், அரசியலமைப்பு பாரம்பரியம் என எப்படிப் பார்த்தாலும் கடந்த காலங்களில் இதேபோல தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அழைத்துள்ளனர் என்பது வரலாறு.
தற்போதைய நிலையில் தவெகவை தவிர வேறு எந்த கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்க உரிமை கோரவும் இல்லை. பெரும்பான்மைக்கு- மெஜாரிட்டிக்கு 7 முதல் 8 இடங்கள் மட்டும்தான் குறைவாக உள்ளன. அடுத்த 10-12 நாட்களில் சட்டசபையில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிபந்தனை விதித்து ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் இதில் என்ன சிக்கல் வந்துவிட்டது? அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் முன்னுதாரணங்களை அழிப்பது அல்லது நீர்த்துப்போகச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, அதை நான் மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறேன். இது எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
