விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அகற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இன்றி த.வெ.க. உள்ளது. மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சித் தலைவர் என்ற முறையிலும், சட்டமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட முக்கியத் தலைவர் என்ற ரீதியிலும் விஜய்க்கு அரசு சார்பில் கான்வாய் வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவியேற்பு விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

ஆளுநரைச் சந்தித்து விஜய், நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து முதலமைச்சருக்கு அளிக்கப்படும் கான்வாய் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டின் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் பலப்படுத்தியிருந்தனர். மெட்டல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று திடீரென கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டது. தற்போது விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பு முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இன்று திடீரென விஜயின் வீட்டின் முன்பு இருந்த மெட்டல் டிடெக்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share