தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதிய ஆட்சி அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்காக திமுக காத்திருக்கும். விஜய் ஆட்சி அமைத்தால் 6 மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் அவரது ஆட்சியில் செயல்பாடுகளை கண்காணிப்போம்.
தமிழகத்தில் அரசியல் சாசன சிக்கல் உருவாவதையோ விரைவில் இன்னொரு தேர்தல் நடைபெறுவதையோ திமுக விரும்பவில்லை.
தமது தலைமையிலான திமுக அரசு செயல்படுத்திய பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை புதிய அரசும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பெண்களுக்கு மாதம் ரூ2,500 வழங்கப்படும் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம்; ஆகையால் குறைந்தபட்சம் ரூ1,000 வழங்குவதை தொடர வேண்டும்.
2021 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 90% திமுக நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த தேர்தலிலும் எங்களால் செயல்படுத்தக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்தோம்.
அனைத்து ரேஷன் அட்டை குடும்பதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை வழங்குவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை தவெக நிறைவேற்றுவது கடினம். அப்படி செய்தால் மகிழ்ச்சிதான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
