கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 7 மாணவர்களுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே.டி. ரேகா விடுத்த செய்திக்குறிப்பில், மாவட்டம் முழுவதும் நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது ஷிகெல்லா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 16 குழந்தைகளின் உடல் நிலையும் சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சுல்தான் பத்தேரி அருகே உள்ள கொலியாடியில் இயங்கும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த வாரம் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொற்று பரவத் தொடங்கியது முதல் 174 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 45 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்ட மருத்துவ அதிகாரி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:
- நோய் அறிகுறி உள்ள குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
- குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- புதிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்து அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
- தனிநபர் சுகாதாரம், உணவுச் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது.
- சுய மருத்துவம் செய்யாமல் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
இதனிடையே, சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 2,200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 1,300க்கும் மேற்பட்ட கிணறுகளில் குளோரின் கலக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்ட ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
