ஐஏஎஸ் vs ஐபிஎஸ் வழக்கு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

ஐபிஎஸ் அதிகாரி ரூபா மௌத்கில் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவரும் மோதலை மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் இன்று (ஜூன் 12) உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் தோழியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்த போது அவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ஐபிஎஸ் ரூபா. 

ADVERTISEMENT

ஐபிஎஸ் ரூபாவுக்கும் கர்நாடகாவில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோகினி சிந்தூரி ஐஏஎஸுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. 

ஐஏஎஸ் ரோகினி சிந்தூரி மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார் ஐபிஎஸ் ரூபா. அதுமட்டுமின்றி ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

ADVERTISEMENT

இதையெல்லாம் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார் ஐபிஎஸ் ரூபா. 

இதனால் ரூபா மீது, ஐஏஎஸ் அதிகாரி ரோகினி தலைமைச் செயலாளர் மற்றும் மைசூர் போலீசாரிடம் புகார் அளித்தார். 

ADVERTISEMENT

அதோடு அவர் தனது சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். 

இவ்வாறு இருவருக்கும் இடையே பொதுத்தளத்தில் மோதல் போக்கு வெடித்த நிலையில், ஐஏஎஸ் ரோகிணி ஐபிஎஸ் ரூபாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். 

அதில் தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கம் மற்றும் மன உளைச்சலுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. 2023 மார்ச் மாதம் பெங்களூரு நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணியின் புகாரை ஏற்றுக்கொண்டு, விசாரணையை தொடங்கியது. 

இதை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை ரத்து செய்ய கோரிய ரூபாவின் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் முழுமையான விசாரணைக்கு உரியவை என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து ரூபா 2023 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் இப்படியான மோதல் போக்கு கவலைக்குரியது என்று கூறி இருந்தது. 

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் இவர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சதீஷ் சந்திரா ஷர்மா மற்றும் சஞ்சீவ் சச் தேவா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், இந்த மோதலை நீண்டகால நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து செல்வதற்கு பதிலாக மத்தியஸ்தம் மூலம் விரைவில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறோம். 

இந்த இரு அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பை மத்தியஸ்தராக நியமிக்கிறோம் என்று உத்தரவு பிறப்பித்தனர். 

தொடர்ந்து, இரு அதிகாரிகளுமே ஒருவருக்கு ஒருவர் தங்களது தொழில் வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் முன்னிலையில் ஆஜராக வேண்டும். இடைக்கால நிவாரணமாக இரு தரப்பினருக்கும் இடையிலான வழக்குகள் தொடர்பான மேல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share