வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடியின் தமிழக வருகை பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிரதமர் மோடியின் தமிழக வருகை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 20) செய்தியாளர்களிடம் பேசினார். பிப்ரவரி 27 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனது பாத யாத்திரை நிறைவு விழாவுக்கு பிரதமர் மோடி வர இருக்கிற தகவலை கூறினார்.
அரசியல் விழாவோடு அரசு விழாக்களையும் பிரதமர் மோடி வருகைக்காக திட்டமிட்டிருக்கிறார்கள். அதாவது குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்துக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி,’
இந்தத் திட்டத்துக்காக 2010 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அப்போதைய திமுக தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதங்கள் எழுதினார். தூத்துக்குடி எம்பி ஆவதற்கு முன்பிருந்தே, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்போதிலிருந்தே கனிமொழி பல முறை இந்தத் திட்டம் பற்றி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவை விட பல விதங்களில் சாதகமான குலசேகரப்பட்டினம் செயற்கைக் கோள் ஏவுதளம் தென் மாவட்டங்களுக்கு முக்கியமான ஒரு மைல் கல்.
இதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு மோடி வருகிறார். தூத்துக்குடி எம்பி என்ற முறையில் கனிமொழியும் கலந்துகொள்கிறார்.
இதற்கிடையே 25 ஆம் தேதி தூத்துக்குடியில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், அமைச்சர் கீதா ஜீவனும் கவனித்து வருகிறார்கள்.
25 ஆம் தேதி அரசு விழாவில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் 28 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்து பிரதமருடன் அரசு விழாவில் முதல்வர் கலந்துகொள்வதா வேண்டாமா என்ற ஆலோசனை நடந்து வருவதாக சொல்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில்.
தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் ஏறுவது சரியாக இருக்குமா என்ற கேள்வியும் திமுக சீனியர்கள் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.
அதேநேரம், ‘தூத்துக்குடியில் பிரதமர் மோடியோடு முதல்வர் ஸ்டாலின் அரசு விழா மேடையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வந்தால்,. அதை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மிகக் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்வையிட்டுச் சென்றும் இப்போது வரை எந்த நிவாரணமும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.
எனவே தூத்துக்குடி மேடையில் பிரதமர் மோடியிடம் இதை ஸ்டாலின் நேருக்கு நேர் வற்புறுத்த சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை அரசியல் ரீதியாகவும் திமுக பயன்படுத்திக் கொள்ள முடியும்’ என்றும் முதல்வரைச் சுற்றியுள்ள சிலரின் ஆலோசனையாக இருக்கின்றன.
எப்படியோ தூத்துக்குடியில் மோடியும் ஸ்டாலினும் ஒரே மேடையில் ஏறும் பட்சத்தில், நிச்சயம் ஒரு பரபரப்பு காத்திருக்கிறது,
இதேநேரம் சென்னையை விட மிகக் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணம் வழங்காமல் பிரதமர் மோடி வருவது நன்றாக இருக்காது, அதனால் குறைந்தபட்ச நிவாரண பேக்கேஜையாவது அறிவித்து, திமுகவின் வாயை அடைக்க வேண்டும் என்று பாஜக தரப்பிலும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
எனவே தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருவதற்கு முன்பு நிவாரண பேக்கேஜ் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்றும் பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…