நள்ளிரவில் கிளாம்பாக்கம் வரும் பயணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் : சிவசங்கர்

Published On:

| By christopher

அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று (பிப்ரவரி 11) காலை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன.

அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டன.  80 சதவீத அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்பட்டன.

பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே புறப்படும். நள்ளிரவு நேரத்தில் எப்பொழுதுமே குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நள்ளிரவில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கின.

கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது பொய்.  அரசுப் பேருந்துகள் குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. எனவே கிளாம்பாக்கத்திற்கு நள்ளிரவு வரும் பயணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உருவாக்கி பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

ஏப்ரல் மாதத்துக்குள் முடிச்சூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும். அதன் பின்னர் கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திமுகவில் மீண்டும் இணைந்த சர்ச்சைக்குரிய பேச்சாளர்!

பிப்ரவரியில் வெளியான காலத்தால் அழியாத காதல் படங்கள் : ஒரு பார்வை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share