ஆளுநர் ரவி மற்றும் குஷ்புவை ஆபாசமாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.
ஆளும் திமுக கட்சியின் பேச்சாளரான சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாக மேடையில் பேசினார்.
இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
எனினும் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டதையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
அதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையில் சிக்கினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக தலைமை, அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கியது. மேலும் பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவரின் ஜாமீன் மனு தொடர்ந்து நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டு வந்தது. எனினும் பல கட்ட முயற்சிக்கு பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்றிட கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிப்ரவரியில் வெளியான காலத்தால் அழியாத காதல் படங்கள் : ஒரு பார்வை!
சென்னை வரும் ஜே.பி.நட்டா : பயணத் திட்டத்தின் முழு விவரம்!