குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை அனுப்பியது சட்டவிரோதமானது மற்றும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) தீர்ப்பளித்துள்ளது. judgment governor Ravi assent
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் இடையூறு செய்வதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இருமனுக்களை தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி, “மத்திய அரசின் வரம்புக்குள் இருக்கும் ஒரு விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது என்றால் அதை நிராகரிக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், மாநில பட்டியலில் இருக்கும் ஒரு விவகாரத்துக்காக அரசு மசோதாவை நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தான். ஆளுநர் மாளிகை கிடையாது. சட்டமன்றத்தில் அலசி ஆராய்ந்து மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. எந்த ஒரு அரசும் மசோதா நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்காது. எனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களை எந்த விளக்கங்களும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல.
ஆளுநர் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சரவை குழுவின் அறிவுரைகளின் படி தான் எடுக்க முடியும்” என்று வாதிட்டார்.
ஆளுநர் ரவி தரப்பில் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, “ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற வாதங்கள் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசியல் சாசன பிரிவு 200, 201 இருக்கும் வரை ஆளுநரின் பதவியை அகற்ற முடியாது.
ஒரு மசோதாவை நிராகரித்தாலோ அல்லது திருப்பி அனுப்பினாலோ, அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் கட்டாயமாக அதை பின்பற்ற வேண்டும் என்பதில்லை” என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது. judgment governor Ravi assent
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பரிதிவாலா, மகாதேவன்,
“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு மூன்று வழிகள் உள்ளன. முதலில், ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது. மூன்றாவது, ஜனாதிபதிக்கு ஒதுக்குவது.
ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்தவுடன், அவர் பிரிவு 200 இன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை விரைவில் பின்பற்ற வேண்டும்.
மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டிய கடமையில் உள்ளார். ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக எளிமையாக அறிவிக்க எந்த வாய்ப்பும் இல்லை.
சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதல் மசோதாவிலிருந்து வேறுபட்டால் மட்டுமே விதிவிலக்கு.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை அனுப்பியது சட்டவிரோதமானது மற்றும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். judgment governor Ravi assent