மெக்கா, மெதினா போன்ற புனித நகரங்களில், இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர் முதலீடு செய்ய சவுதி அரேபியா அனுமதியளித்துள்ளது. Saudi to allow foreign investment
சவுதி அரேபியாவில் மெக்கா, மெதினா நகரங்கள் புனித நகரங்களாக கருதப்படுகின்றன. இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நகரங்களுக்கு சென்று வருவது கடமையாக கருதப்படுகிறது. முக்கியமாக ஹஜ் காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் இந்த இரு நகரங்களுக்கும் வருகை தருவார்கள்.
வெளிநாட்டவர் வருகையால் சவுதி அரேபியாவுக்கு குறைந்தபட்சம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைக்கிறது.
2030 ஆம் ஆண்டு இந்த நகரங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 கோடியாக உயரும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டு மட்டும் 1,39,934 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சவுதி அரேபிய அரசு மெக்கா, மெதினா போன்ற புனித நகரங்களில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் முதலீடு செய்ய அனுமதியளித்துள்ளது. அதன்படி, சவுதி அரேபிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நிதி முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கும் இந்த புனித நகரங்களில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் இந்த நிறுவனங்களில் 49 சதவிகித அளவு மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியர்களும் சவுதி அரேபிய பங்கு சந்தையின் விதிமுறைகளுக்குட்பட்டு (Capital Market Authority) மெக்கா மற்றும் மெதினாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம்.
சவுதி அரேபிய பங்குசந்தை தான் வளைகுடா நாடுகளில் மிகப் பெரியது ஆகும். இந்த பங்குசந்தையில் 150 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. Saudi to allow foreign investment