ராணி எலிசபெத் மரணம்: சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்த சசிகலா

Published On:

| By christopher

சசிகலா

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவை ஒட்டி தனது சுற்றுப்பயணத்தை சசிகலா ஒத்திவைத்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கிடையே மோதல் நிலவி வருகிறது. இருதரப்பும் நீதிமன்றங்களின் படியேறி தங்களுக்கு சாதகமான உத்தரவினை பெற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே அதிமுக தொண்டர்களை நேரில் சந்திக்க சசிகலா தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தொகுதி வாரியாக குறிப்பிட்ட இடைவெளியில் சென்று தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நாளை முதல் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உடல்நலகுறைவால் மறைந்ததை முன்னிட்டு சசிகலா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, நாடு முழுவதும் நாளை 11-09-2022 அன்று, தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுவதால், ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சேலம் மாவட்டத்திற்கு மேற்கொள்ள இருந்த புரட்சிப்பயணம் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று சசிகலா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வருகின்ற 12-09-2022 திங்கள்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கும், 13-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்திற்கும் சசிகலா பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share