”விஜயகாந்தும் நானும் ..” – நெகிழ்ந்த சரத்குமார்

Published On:

| By Minnambalam Desk

Sarathkumar spoke emotionally about Vijayakanth.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியனும், சரத்குமாரும் சேர்ந்து நடிக்க, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கொம்பு சீவி .

தார்னிகா, காளி வெங்கட், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கிராமிய பின்னணியில் ஆக்சன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனக்கும் விஜயகாந்துக்கு இருந்த நட்பின் கனத்த பக்கங்களை புரட்டிப் பார்த்துப் பேசினார் சரத்குமார்.

”இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

ADVERTISEMENT

சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.‌

புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, ”சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு போய் விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் என்னை நடிக்க வைக்க முடிவு செய்து விட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.

ADVERTISEMENT

அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். ‘சரத்… இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்’ என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.

புலன்விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.

இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.

இந்தப் படத்தில் நானும் சண்முகப் பாண்டியனும் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் ‘தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்’. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.”என்றார்.

அது ஒரு பொற்காலம்

– ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share